Published : 19 Jun 2014 01:17 PM
Last Updated : 19 Jun 2014 01:17 PM
தொடர்பு மொழிப் பிரச்சினையில், அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.
அவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத் தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும். 27-5-2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.
அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் “ட்விட்டர்”, “பேஸ்புக்” போன்ற தங்களுடைய சமூக வலைத் தளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (It is ordered that Government Employees and Officials of all Ministries, Departments, Corporations, or Banks, who have made official accounts on “Twitter”, “FaceBook”, “Google”. “You Tube” or “Blogs” should use Hindi, or Both Hindi and English but give priority to Hindi).
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, “டிவிட்டரில்” இந்தி மொழியைத் தான் பயன்படுத்துகிறார் என்று அந்த ஆங்கில நாளேட்டின் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை.
“அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவு - ஆட்சி மொழி பற்றிய பிரிவு - கட்டாயமாக அரபிக் கடலிலே தூக்கி எறியப்பட வேண்டு”மென்றும்; “நல்ல நாட்டுப் பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடிமக்களான தமிழ் மக்களை, கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே இது” என்றும்; மூதறிஞர் ராஜாஜி எடுத்துரைத்து எச்சரித்ததை யாரும் மறந்து விடவில்லை.
4-3-1965 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் “மொழிப் பிரச்சினையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும், ஆட்சிமொழிகளாகும் வரை, ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப் போக்குக்கு விட்டு விடலாம்” என்று அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கியதை மறந்து விடத் தான் முடியுமா?
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பை எதிர்த்திடவும், எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதி பூண்டுள்ளது.
இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம் வரையில், மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும், பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனது உரையில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும், மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்கு உரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில் தேவையான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
அதன் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான, இலக்கியப் பண்பாட்டு வளம் நிறைந்த, தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் . இது தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாக மேற்கொண்டு வரும் நிலைப்பாடாகும்.
இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது , இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும்.
இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவதுகால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும்.
எனவே பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல்படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும்" இவ்வாறு கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT