Last Updated : 01 Jun, 2014 10:20 AM

 

Published : 01 Jun 2014 10:20 AM
Last Updated : 01 Jun 2014 10:20 AM

500 ரூபாய் பிரச்சினையால் அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை: உயிரை பறித்த ’பாச வலை’

அன்றில் பறவைகளில் ஒன்று பிரிந்தால் இன் னொன்று தன்னை மாய்த்துக்கொள்ளும் என்று தமிழ் இலக்கியம் புகழ்ந்து பாடுவதை நாம் படித்து ரசித்திருப்போம். ஆனால் நாகை மாவட்டம் வலிவலத்தில் நடந்திருக்கும் சோகச் சித்திரம் எந்த இலக்கியத்திலும் இடம்பெறாதது.

நாகை மாவட்டம் வலிவலம் முதலியார் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். 31 ஆண்டுகளுக்கு முன்பே காதல் கலப்பு மணம் புரிந்த இவர் கம்பி பிட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு மகன் கள். மூத்த மகன் செந்தில் சென்னையில் ஒரு பேன்சி ஸ்டோரிலும் இளைய மகன் சதீஷ் உள்ளூரிலிலேயே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலையும் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி விற்றதில் கிடைத்த லாபத்தில் 500 ரூபாயை குடும்பத்துக்குத் தெரியாமல் சதீஷ் செலவு செய்திருக்கிறார். இது தெரிந்த நாகராஜன் மகனை கண்டித்திருக்கிறார்.

விஷம் அருந்திய தந்தையும் மகனும்

பாசத்தோடு வளர்த்த தந்தை தன்னை திட்டி விட்டாரே என்கிற வருத்தத்தில் மனம் உடைந்த சதீஷ் விஷம் அருந்திவிட்டு வீட்டில் வந்து படுத்து விட்டார். இரவு 2 மணியளவில் அவர் வாந்தி எடுத்தபோது விஷம் அருந்தியது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சதீஷை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மகன் விஷம் குடித்து கிடக்கும் நிலையில் எழுந்திருக்காமல் படுத்துக் கிடக்கும் நாகராஜனை எழுப்பியபோதுதான் தெரிந்தது, அவரும் விஷம் அருந்தி இறந்து கிடந்தது. வீட்டில் தந்தையும், மருத்துவமனையில் மகன் சதீஷும் பாசத்தின் உச்சக்கட்ட எல்லையின் அழுத்தம் தாங்காமல் இறந்தார்கள். வியாழக்கிழமை தந்தை மகன் இருவருக்கும் இறுதி சடங்கு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் பால் தெளியல் முடிந்து உறவினர்கள் கலைந்தார்கள்.

தூக்கு மாட்டிய தாயும் மகனும்

வீட்டில் இருந்தது நாகராஜனின் மனைவி ராஜலட்சுமியும், செந்திலும்தான். இருவரும் என்ன பேசினார்கள்? எப்படி இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சனிக்கிழமை காலையில் அக்கம்பக்கத்தினர் திறந்து பார்த்தபோது, அவர்கள் இருவரும் உத்தரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போயிருந்தது தெரியவந்தது. மகனைத் திட்டிவிட்டோமே என்கிற வருத்தத்தில் தந்தையும், தந்தை மனம் நோகும்படி செய்து விட்டோமே என்று இளைய மகனும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள, அவர்கள் இல்லாத உலகத்தில் நாம் மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்று தாயும், மூத்த மகனும் அவர்கள் வழியில் தங்களை ஒப்படைத்த இந்த பாச அர்ப்பணிப்பை என்னவென்று சொல்வது?

........................................

அதிரவைத்த செய்தி

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில், 'தி இந்து'வின் ஆறாம் பக்கத்தை திருப்பியபோது ஒரு தலைப்பு அதிரச் செய்தது. அது, '500 ரூபாய் பிரச்சினையால் அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை' என்பது. வாசிக்கத் தொடங்கினேன். அடுத்த அதிர்ச்சி. குடும்பமே தற்கொலைசெய்துகொண்டதை அன்றில் பறவைகளோடு ஒப்பீடு செய்திருந்தார் செய்தியாளர். செய்தியின் முடிவில் மீண்டும் அதிர்ச்சி. ஓர் ஏழைக் குடும்பம் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொண்டுள்ள கோர நிகழ்வை, அன்றில் பறவைகளோடு ஒப்பீடுசெய்து, அது ஒரு பாச அர்பணிப்பு என்று குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது கோபத்தை வரவழைத்தது. 'தி இந்து' இப்படிச் செய்யக் கூடாது. - சின்னையா காசி, முகநூல் வழியே…

நம்பிக்கையைக் காப்போம்!

எத்தனையெத்தனை சவால்களும் இன்னல்களும் சூழ்ந்திருந்தாலும், அவற்றைத் துணிந்து நின்று எதிர்கொள்வதே வாழ்க்கை. நன்னம்பிக்கையை விதைப்பதையே 'தி இந்து' பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ் நாளிதழ் தொடங்கிய நாளிலிருந்தே எல்லா வகைகளிலும் இதை வெளிப்படுத்திவருகிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முடக்கிப்போடப்பட்டவர்கள் காலத்தை எப்படியெல்லாம் வென்று நிற்கிறார்கள் என்பதற்கான உற்சாக உதாரணங்களைத் தொடர்ந்து வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மிகச் சமீபத்தில்கூட, தேர்வுத் தோல்விகள் இளைய சமூகத்தின் மனதைக் காயப்படுத்திவிடக்கூடாது என்று உளவியல் நிபுணர்களின் உற்சாக வழிகாட்டல்களை வெளியிட்டது. இந்நிலையில், நேற்று வெளியான செய்தி வாசகர் சின்னையா காசியிடம் ஏற்படுத்திய வருத்தத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. 'தி இந்து' என்றும் வாசகர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கும்.தொடர்ந்து நன்னம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் விதைக்கும்.

- ஆசிரியர்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x