Published : 18 Mar 2022 04:15 AM
Last Updated : 18 Mar 2022 04:15 AM

காஷ்மீரில் இருந்து நடைபயணமாக குமரி வந்த இளைஞர்: இந்திய மக்களின் வேறுபட்ட வாழ்க்கை முறையை அறிய முயற்சி

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு நடைபயணமாக வந்த ஓம்கார் மதுசூதன் கர்பே முக்கடல் சங்கமத்தில் தேசியகொடியுடன் உற்சாகமாக வலம் வந்தார்.

நாகர்கோவில்

இந்தியாவில் வசிக்கும் மக்களின் வேறுபட்ட வாழ்க்கை முறை, கலாச்சாரங்களை அறியும் வகையில் காஷ்மீரில் இருந்து 200 நாட்கள் நடந்தே வந்த இளைஞர் நேற்று கன்னியாகுமரியை அடைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் ஓம்கார் மதுசூதன் கர்பே(28). புகைப்படக் கலஞரான இவர் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றை அறிந்து கொண்டு, அவற்றை ஆராய்ச்சி கட்டுரையாக புத்த வடிவில் வெளியிட முடிவு செய்தார். இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி லடாக்கிலிருந்து தனியாக தனது நடைபயணத்தை அவர் தொடங்கினார்.

காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக தமிழகம் வந்த அவர் நேற்று காலை கன்னியாகுமரியை அடைந்தார். தேசிய கொடியுடன் வந்த ஓம்கார் மதுசூதன் கர்பே, முக்கடல் சங்கமத்தில் முழங்காலிட்டு கடலை பார்த்து வணங்கினார். பின்னர், தேசியக் கொடியுடன் உற்சாகமாக வலம் வந்தார். அவரை கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் முத்துசாமி, ஜனார்த்தனன், பக்தர்கள் சங்க செயலாளர் முருகன், கவுன்சிலர் சுபாஷ் மற்றும் திரளானோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

ஓம்கார் மதுசூதன் கர்பே கூறும்போது, “இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பல மொழிகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்களுடன் உள்ளனர். அவர்களது வாழ்க்கை முறைகளை அறியும் வகையில் 200 நாள் நடைபயணத் திட்டத்தை வகுத்தேன். தினமும் 10 கிலோ மீட்டர் நடப்பேன். பொதுஇடங்களில் மக்களிடம் பேசி அவர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொண்டேன்.

எந்தனையோ வேறுபாடான பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் இருந்தாலும் அனைவரிடமும் இந்தியர் என்ற உணர்வும், சகோதரத்துவமும் இருப்பதை பார்க்க முடிந்தது. 200 நாட்களிலும் நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களை சந்தித்ததில் பெரும் அனுபவங்கள் கிடைத்தன. 50 வயதை கடந்தவர்கள் பெற்ற வாழ்க்கை அனுபவம் போல் உள்ளது. இந்த ஆராய்ச்சி கட்டுரையை புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x