Published : 18 Mar 2022 04:15 AM
Last Updated : 18 Mar 2022 04:15 AM
கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் ஒன்றிய கவுன்சிலர்களாக உள்ள பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை என ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று புகார் மனு அளித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது:
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுகவினர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களாக உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் திட்டம், வடிகால், சாலை அமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை.
மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் எந்தவித வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ள இயலவில்லை. மேலும், ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்துகொள்பவர்கள் மிரட்டப்படுகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகின்றனர்.
கரூர், கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ள பகுதிகளுக்கு எந்தவிதமான திட்டப் பணியும் வழங்கப்படுவதில்லை. அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை ஆணையர்கள் தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். எனவே, அனைத்து பகுதி மக்களுக்கும் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அப்போது, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.திருவிகா, அரவக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கலையரசன், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT