Published : 18 Mar 2022 06:11 AM
Last Updated : 18 Mar 2022 06:11 AM

கே.வி.குப்பம் பள்ளியில் பணியிட மாறுதலில் சென்ற ஆசிரியைகளை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த மாணவிகள்

கே.வி.குப்பம் அரசினர் மேல்நிலை பள்ளியில் பணியிட மாறுதலில் சென்ற ஆசிரியைகளை சுற்றி நின்றபடி கண்ணீர் மல்க பேசும் மாணவிகள்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியைகள் புனிதா, ஜெயந்தி, தனலட்சுமி, சுகந்தி ஆகியோர் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் நடத்தி வந்தனர். இவர்கள் 5 பேரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியில் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் 5 பேரும் ஆசிரியர் களுக்காக பொது மாறுதல் கலந் தாய்வில் இரு தினங்களுக்கு முன்பு பங்கேற்றனர். இதில், ஆசிரியைகள் புனிதா, காட்பாடி காங்கேயநல்லூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கும், ஜெயந்தி என்பவர் லத்தேரி அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளிக்கும், தனலட்சுமி என்பவர் மேல்பாடி அரசினர் மேல்நிலை பள்ளிக்கும், சுகந்தி என்பவர் ஆற்காடு அரசினர் பள்ளிக்கும், ஆசிரியர் கார்த்திகேயன் என்பவர் பென்னாத்தூர் அரசினர் மேல்நிலை பள்ளிக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை 5 ஆசிரியர்களும் நேற்று முன்தினம் காலை பெற்றுக்கொண்டு பிற்பகலில் பள்ளிக்குச் சென்று அங்கிருந்து தங்களை பணியில் இருந்து விடு வித்துக்கொண்டனர். இந்த தகவல் அறிந்த பள்ளி மாணவிகள் பல ஆண்டுகளாக தங்களுக்கு அன்புடன் பாடம் நடத்திய ஆசிரியைகளை பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே நின்ற ஆசிரியைகளை சுற்றி நின்றபடி பேசிய மாணவிகள், ‘இங்கேயே இருங்கள், யாரும் போக வேண்டாம்’ என அழுதபடி கேட்டதால் ஆசிரியை களும் கண்ணீர் விட்டனர். பின்னர், மாணவிகளை சமாதானம் செய்த ஆசிரியைகள் ‘நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’ என அறிவுரை கூறினர். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக ஊடகங்களில் நேற்று அதிகம் பகிரப்பட்டதால் காண்போரை நெகிழச்செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x