Last Updated : 17 Mar, 2022 09:48 PM

 

Published : 17 Mar 2022 09:48 PM
Last Updated : 17 Mar 2022 09:48 PM

”நான் தன்னிச்சையாக செயல்படுவது எனது தொகுதி மக்களுக்கும் தெரியும்” - கரூர் மேயர் கவிதா சிறப்புப் பேட்டி

கரூர் மேயர் கவிதா

”நான் ஆசிரியர் ஆகவேண்டும் என்றுதான் பி.எட் முடித்தேன். அதுதான் என் கனவு. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த இடஒதுக்கீட்டால் எதிர்பாராத பயணமாக நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்” என்கிறார் கரூர் மேயர் கவிதா.

பலத்த போட்டிகளுக்கு இடையே கரூர் மாநகராட்சியின் மேயராக அமர்ந்திருக்கிறார் கவிதா. இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம், அரசியலில் பெண்களின் பங்களிப்பு என பல தகவல்களை பகிர்ந்துள்ள கவிதாவின் பேச்சில் சமூக அக்கறையும், அரசியல் அனுபவமும் நிறைந்துள்ளது. கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர் கவிதாவுடன் ’இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்காக பேசினேன். அந்த உரையாடல், இதோ:

மாநகராட்சியாக உருவான பிறகு கரூரின் முதல் மேயர், அனுபவம் எப்படி உள்ளது?

”மேயராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெண்களுக்கு இந்த அளவு உள்ளாட்சி தேர்தல்களில் இடஒதுக்கீடு அளித்ததில்லை. 2006 மற்றும் 2011 நகர்மன்ற தலைவராக நான் இருந்திருக்கிறேன். அப்போது கலைஞர் பெண்களுக்கு அறிவித்த இடஒதுக்கீட்டால்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்களின் முன்னேற்றம்தான் சமூகத்தின் முன்னேற்றம் என்று நினைக்கும் முதல்வர் ஆட்சியில் மேயராக தேர்தெடுக்கப்பட்டது மிகுந்த பெருமையாக உள்ளது.”

எத்தனை வருடங்களாக அரசியலில் உள்ளீர்கள், அரசியலுக்கு எப்படி வந்தீர்கள்..?

”எனது குடும்பம் அரசியல் பின்புலம் இல்லாத குடும்பம். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவள். என் தந்தை மாட்டு வண்டி தொழிலாளி. எனது கணவர் திமுக கழகத்தில் 30 வருடமாக தலைமைக் கழக பேச்சாளராக இருக்கிறார். அவர் மூலமாகவே எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது. நான் ஆசிரியர் ஆகவேண்டும் என்றுதான் பி.எட் முடித்தேன். அதுதான் என் கனவு. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த இடஒதுக்கீட்டால் எதிர்பாராத பயணமாக நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்”

உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருக்கும் பெண்கள் வெறும் கைப்பாவைகள்தான் என்ற விமர்சனத்துக்கு உங்க பதில்...

” நான் 2006-ஆம் நகர்மன்ற தலைவராக பதவியேற்றபோது என் கணவர் அலுவலகத்துக்கு வந்தார். அதன்பின்னர் 15 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் இன்றுவரை அலுவலகம் கூட வந்ததில்லை. கட்சி கூட்டங்கள், அதிகாரிகள் கூட்டம் என எதற்கும் அவர் என்னுடன் வரமாட்டார். நான் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதே அவர் விருப்பம். நானும் அதனைதான் விரும்புகிறேன். நான் நகரமன்றத் தலைவராக இருந்தபோதும் எனது கணவர் எதிலும் தலையிட்டது இல்லை. இது என் தொகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும்.”

பிடித்த அரசியல் தலைவர்...

”பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் பிடிக்கும்.”

பெண் தலைவர்கள்...

”அரசியலில் இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி பிடிக்கும். ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகளின் மீது எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் தைரியம் , துணிச்சலுக்காக ஜெயலலிதா பிடிக்கும்.”

கரூரின் முக்கிய பிரச்சனையாக நீங்கள் பார்ப்பது, அதற்கு என்ன செயல் திட்டங்கள் வைத்துள்ளீர்கள்..?

”குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். ஏற்கெனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் வருங்காலத்தில் கரூர் மக்களுக்கு தினமும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக போக்க வழிமுறைகளை விரைந்து செய்ய வேண்டும். குடிநீருக்கு அடுத்தது, பொது சுகாதாரம். சுத்தமான மாநகராட்சியாக கரூர் உருவாக வெண்டும். இது இரண்டுதான் தற்போது முக்கிய பார்வையாக உள்ளது.”

கரூரில் நிலவும் சாயக் கழிநீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்..?

”கரூரை பொறுத்தவரை கீழ்பாகம், மேல்பாகம் பகுதிகளில்தான் தற்போதைக்கு சாயக் கழிவு நீர் பிரச்சினை உள்ளது. அவை ஊராட்சி தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் அப்பகுதிகள் கரூர் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் வரும். அப்போதுதான் நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் அமைச்சர் செந்தில்பாலாஜி இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்.”

சாயக் கழிவு நீர் பிரச்சனை காரணமாக, கரூரில் வேலை இழப்பு ஏற்பட்டது. அதற்கு என்ன தீர்வு உங்களிடம் உள்ளது..?

”வேலையிழப்பு ஏற்பட்டது உண்மைதான். பள்ளிப் பாளையம், குமார பாளையம், சென்னி மலை பகுதிகளுக்குத்தான் கரூர் மக்கள் வேலைவாய்புக்காக சென்றுக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இப்பிரச்சினைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வேலைவாய்ப்புக்கான நடவடிக்கைகள் சிட்கோ மூலம் உருவாக்கப்படும்.”

அரசியலுக்கு வரும் இளம்பெண்களுக்கு நீங்கள் கூறுவது,

”இனி எல்லாமே இளைஞர்கள் கையில்தான் உள்ளது. எனவே அரசியலை எதிர்மறையாக வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்காமல் அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும். ஒரு இடம் சுத்தமாக வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது; நாமும் இறங்கி சுத்த செய்யலாம். அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம் ஏற்படும். இந்திய முதல்வர்களுக்கு எல்லாம் முன்னோடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் உள்ளார். அவரை அனைவரும் முன்னோடியாக எடுத்துக் கொள்ளாலம். நானும் நிச்சயம் முன் உதாரணமாக உழைப்பேன்.”

அடுத்த ஐந்து வருடம் மேயராக உங்கள் பயணம்?

”தற்போதுதான் கரூர் மாநகராட்சியாக மாறி இருக்கிறது. என் பணிகள், வரையறைகளை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள குறைந்தபட்சம் ஒரு மாதமாவது எனக்கு தேவைப்படும். சுமார் 6 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதனை நிச்சயம் பூர்த்தி செய்வேன். குடிநீர் மற்றும் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்பேன்.”

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x