Published : 17 Mar 2022 06:33 PM
Last Updated : 17 Mar 2022 06:33 PM
காரைக்கால்: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே ஒட்டாத உறவு இருந்து வருவதாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
காரைக்காலில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. மற்ற மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு என்பது தவறான கருத்து. வாக்கு இயந்திரங்களை கடத்துவது, அரசுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்ததன் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு பல இடங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவது போன்ற நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர், மத்திய அமைச்சர்கள் வரிசை கட்டி பிரச்சாரம் செய்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றனர். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே ஒட்டாத உறவு இருந்து வருகிறது. ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற பாஜக திட்டமிட்டு, என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது வழங்கியதை விட குறைவான நிதியை அளிக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி நடைபெற்றும் புதுச்சேரியில் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டாகியும் புதுச்சேரி முதல்வர் இதுவரை காரைக்காலுக்கு வரவில்லை, ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவில்லை. இதன் மூலம் புதுச்சேரி அரசு காரைக்காலை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவே தெரிகிறது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. புதுச்சேரியை விட காரைக்காலில் நில அபகரிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT