Published : 17 Mar 2022 08:29 AM
Last Updated : 17 Mar 2022 08:29 AM

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்: 27 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் தேரோட்டத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் வெள்ளோட்டத் துக்கு தயாராக இருக்கும் புதிய தேர்.

லலிதாசாய்

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த ஆறகழூர் பெரியநாயகி உடனுறை  காமநாதீஸ்வரர் கோயிலில்  மஹாமேரு மண்டலியால் வழங்கப்பட்டுஉள்ள புதிய திருத்தேரின் வெள்ளோட்ட திருவிழா நாளை (18-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டத்தைக் காண பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது ஆறகழூர். இங்கு அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்மிகு காமநாதீஸ்வரர் திருகோயில் அமைந்துள்ளது. 1190 முதல் 1260 வரையான காலத்தில் மகத தேசத்தை ஆண்ட வாணகோவரையர் ஆறகழூரில் மிகப் பிரம்மாண்ட அளவில் தேர் திருவிழாவை நடத்துவதை தங்களது பெருமையாக கருதினர்.

இக்கோயிலில் பங்குனி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று தேர்த்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். பல்வேறு காரணங்களால் கடந்த 27 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

இந்தநிலையில், ஆறகழூர் வட்டாரத்தைச் சேர்ந்த மக்களின் நீண்டநாள் வேண்டுகோளை அறிந்த    மதுராம்பிகநாத பிரம்மேந்திர சரஸ்வதி அவதுத சுவாமிகளும் ( மஹாமேரு மண்டலியின் நிறுவனர்), அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்படுபவருமான குருஜி, அவர்களது குடும்ப உறுப்பினர்கள், மஹாமேரு மண்டலியைச் சேர்ந்தவர்கள் ஆகியோரது கைங்கர்யத்துடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய திருத்தேரின் வெள்ளோட்ட திருவிழா ஆறகழூரில் நாளை (18-ம் தேதி) நடைபெறுகிறது.

கோயிலின் புதிய மரத்தேர் குறித்து கோயிலின் சிவாச்சாரியார் ரவி கூறுகையில், ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவது போல, ஆறகழூர் கிராம மக்களின் நீண்ட நாள் கனவான கோயில் தேரோட்டம், பல முக்கியமான பெரியவர்களின் கூட்டு முயற்சியில் நனவாகியுள்ளது.

புதிய தேரின் எடை 15 டன். இதனை பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூரைச் சேர்ந்த சிற்பிகள் வடிவமைத்துள்ளனர். மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த தேரில் சிவபுராணம், இந்து மத காவியங்களை எடுத்துக் கூறும்விதமாக சுவாமிகளின் உருவங்கள், தேவதைகள், குதிரைகள், நாகங்கள், யானைகள், விநாயகர், முருகர் போன்ற ஏராளமான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

புதிய தேரை உருவாக்க ரூ.20 லட்சம் வரை செலவானது. மொத்த தொகையையும் கொடுத்து உதவிய  மஹாமேரு மண்டலிக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புதிய தேருக்கு ரூ.3.6 லட்சம் மதிப்பில் இரும்பினால் ஆன அச்சு, சக்கரத்தை இந்து சமய அறநிலையத் துறை வழங்கிஉள்ளது. குருஜியின் முயற்சியில் மட்டுமே புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்றார்.

புதிய தேரின் வெள்ளோட்டத்தில் குருஜி உள்ளிட்ட மஹாமேரு மண்டலியைச் சேர்ந்தவர்கள் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

புதிய தேர் வெள்ளோட்டம் குறித்து குருஜி கூறுகையில், தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து இனி வரும் ஆண்டுகளில் தேர் திருவிழா உட்பட கோயிலில் திருவிழாக்கள் தொடர்ந்து வெகு விமரிசையாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

வாயு ஸ்தலம்

சேலத்திலிருந்து 80 கிலோ மீட்ட தொலைவில் ஆத்தூர் அருகே இந்த வாயு ஸ்தலம் அமைந்துள்ளது. தனக்கு வழங்கப்பட்ட சாபத்திலிருந்து விடுபடுவதற்காக மன்மதன் (காமன் சுவாமி) சிவனை நோக்கி தவமிருந்து வழிபட்ட இடம் இது என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால், இங்குள்ள சிவன் காமநாதீஸ்வரர் என்றும் அம்பாளை பெரிய நாயகி என்றும் அழைக்கின்றனர்.

பாடல்பெற்ற ஸ்தலம் ஆன இக்கோயிலின் அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இந்த கோயில் 13-ம்நூற்றாண்டுக்கு முன்பே இருந்ததாக தெரிய வருகிறது.

இந்த கோயிலின் அரிதான சிறப்பு, பங்குனி மாதம் பூரம் நாளில் சூரிய ஒளியானது கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமான் மீது படர்ந்து செல்வதாகும். இந்த கோயிலின் மூலவராக காமநாதீஸ்வரர் அருள்பாலித்து வரும் நிலையில், இக்கோயிலில் உள்ள அஷ்ட பைரவர்களுக்கும் முக்கியத்தும் வழங்கப்படுகிறது.

கோயிலினுள் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பலிபீடன பைரவர், கால பைரவர் என அஷ்ட பைரவர்கள் அருள்பாலிப்பது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்குப் பின்னர் (கிருஷ்ண பக்ஷ அஷ்டமி) வரும் அஷ்டமி நாளில் நள்ளிரவில் இக்கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

திருப்பணி சேவைகள்

ஆறகழூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், பக்தர்களால் குருஜி என்றும் அழைக்கப்படும்    மதுராம்பிகநாத பிரமேந்திர சரஸ்வதி அவதுத சுவாமிகள் தன் வாழ்நாள் முழுவதையும் இக்கோயிலின் தினசரி திருப்பணி சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

குருஜியும், மஹாமேரு மண்டலியைச் சேர்ந்த உறுப்பினர்களும், கேரளாவில்  வளையநாடு, மத்திய பிரதேசத்தில் ராஜ ராஜேஸ்வரி பீடம், வாரணாசியில்  விசாலாட்சி கோயில், மற்றும்  அன்னபூரணி கோயில்கள், புரியில்  பூர்வம்நாய பீடம், தமிழகத்தில்  கன்னியாகுமரி கோயில் மற்றும் இலங்கையில் கொழும்பு நகரில்  மஹாலட்சுமி கோயில் ஆகியவற்றில் மேரு-வை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x