Published : 17 Mar 2022 04:00 AM
Last Updated : 17 Mar 2022 04:00 AM
கோவை மாநகராட்சியில் இணையவழி முழு நேர குடிநீர் விநியோக கண்காணிப்பு திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது ஆண்டுதோறும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களை ஊக்குவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறையால் உருவாக்கப்பட்ட இணையவழி குடிநீர் விநியோக தொழில்நுட்பத் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கி, கோவை மாநகராட்சி பகுதியில் இதனை செயல்படுத்த ரூ.2.5 கோடி நிதியை ஒதுக்கியது.
கோவை மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் கல்லூரி துறையினர் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். மாநகராட்சியின் 17-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர், அபிராமி நகர் பகுதிகளில் உள்ள 400 வீடுகளுக்கு முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் முழு நேர குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் சேரன் நகர் பகுதியில் நடைபெற்றுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேற்று பார்வையிட்டு, விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். முழுவதும் இணையவழியில் கண்காணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இத்திட்டம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிறைவேற்றப்படுகிறது. டிவியை இயக்குவது போல, ரிமோட் கன்ட்ரோல் மூலமாக குடிநீர் விநியோகம், விநியோக நிறுத்தம் உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும். இத்திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து மாநகராட்சியின் அடுத்தடுத்த பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும்” என்றனர்.
இத்திட்டத்தில் உள்ள கல்லூரியின் பேராசிரியர் சவுந்தர்ராஜன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
இத்திட்டம் சென்சார் தொழில்நுட்பத்தை உள்ளடக்கி இணையவழியில் நிறைவேற்றப்படுகிறது. மாநகராட்சி பொறியாளர்கள் கண்காணிப்புக்கென சேரன் நகர் தண்ணீர் தொட்டி பகுதியில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக பொறியாளர்கள், குடிநீர் விநியோக பணியில் உள்ளவர்கள் எங்கிருந்தும் குடிநீர் விநியோகம் செய்தல், விநியோகத்தை நிறுத்தும் பணியை ரிமோட் மூலமாக செய்ய முடியும். குடிநீர் விநியோக சேமிப்பு தொட்டியில் உள்ள குடிநீரின் அளவை சீராக கண்காணிக்க முடியும். கையிருப்பில் உள்ள குடிநீரை யாருக்கும் எவ்வித மாறுபாடும் இல்லாமல் சமமாக பிரித்து விநியோகம் செய்ய முடியம். அலைபேசி செயலி, கணினி மற்றும் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து குடிநீர் வீணாகுதல், குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களையும் கண்டறிய முடியும்.
முதற்கட்டமாக 400 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவதன் மூலமாக திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதில், விநியோகிக்கப்படும் குடிநீர் தரமாக உள்ளதா என்பதை கண்டறிய 5 இடங்களில் கண்காணிப்பு தொழில்நுட்ப கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குடிநீர் தரம் இல்லையெனில் உடனடியாக கண்டுபிடித்து தகவலை அளிக்கும். அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்தியாவில் முதன்முறையாக இத்திட்டத்தை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குளக் கரைகளில் ஆய்வு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 9 குளங்களில் 7 குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 74-வது வார்டு செல்வாம்பதி குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் 3.8 ஏக்கர் பரப்பில் நீர்நிலையை விரிவுபடுத்தி, அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணாம்பதி குளத்தில் ரூ.19.36 கோடி மதிப்பீட்டில் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT