Published : 17 Mar 2022 05:54 AM
Last Updated : 17 Mar 2022 05:54 AM

வேலூரில் சதமடித்தது வெயில்: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

வேலூரில் நேற்று 101.1 டிகிரி வெயில் வாட்டியது. இதனால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தென்பட்ட கானல்நீர். இடம்: வேலூர் அடுத்த சதுப்பேரி. படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூரில் வெயில் அளவு நேற்று சதமடித்தது. இந்த ஆண்டின் முதல் சதம் நேற்று பதிவானது.

தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்ட் மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி, இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, மார்ச் மாதம் தொடக்கத்தில் 90 டிகிரி செல்ஷியத்தை கடந்த வேலூர் வெயில் அளவு மார்ச் 11-ம் தேதி 95 டிகிரியாக பதிவானது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வந்த வெயில் அளவு நேற்று முன்தினம் 99 டிகிரி செல்ஷியாக பதிவானது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கே கொளுத்த தொடங்கிய வெயில் அளவு பகல் 1 மணிக்கு உச்சத்தை தொட்டது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டன. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது.

வெயில் காலம் தொடங்கியதால் வேலூர் மாவட்டத்தில் ஆங் காங்கே பழச்சாறுக்கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வேலூரில் வெயில் அளவு 101.1 டிகிரி செல்ஷியாக பதிவாகி இந்த ஆண்டில் முதல் சதத்தை நேற்று எட்டியது. இனி வரும் நாட்களில் 100 டிகிரியை கடந்தே வெயில் அளவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x