Published : 16 Mar 2022 05:29 PM
Last Updated : 16 Mar 2022 05:29 PM

வைகை ஆற்றங்கரையில் அமையும் ஸ்மார்ட் சிட்டி பூங்கா: தனியார் ஆக்கிரமிப்பிற்கு முட்டுக் கொடுப்பதாக குற்றச்சாட்டு

மதுரை வைகை வடகரை அருகே கட்டப்பட்டு வரும் பூங்கா | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை; மதுரை மதிச்சியம் அருகே வைகை ஆற்றங்கரையில் 'ஸ்மார்ட் சிட்டி' நான்குவழிச் சாலைக்கும், ஆற்றுக்கும் இடையில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கிறது. இந்த பூங்கா அப்பகுதியில் தனியாரின் நிரந்தர ஆக்கிரமிப்பிற்கு முட்டுக் கொடுத்து வழி ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை வைகை ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உயர்மட்ட மேம்பாலங்கள், பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. இதில், ஆற்றங்கரையில் அமைக்கப்படும் நான்குவழிச் சாலை தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே துண்டிக்கப்படுகிறது. வைகை ஆற்றில் அமைந்துள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தயக்கமே ஸ்மார்ட் சிட்டி நான்குவழிச் சாலை தொடர்ச்சியாக அமையாமல் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புள்ள சில இடங்களில் நான்குவழிச் சாலை ஆற்றங்கரையோரம் செல்லாமல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் இருந்து விலகி செல்கிறது. அதனால், தற்போது ஆக்கிரமிப்புள்ள கட்டிடங்களை இடிக்காமலே அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து ஸ்மார்ட் சிட்டி நான்குவழிச் சாலையை தொடர்ச்சியாக அமைக்கலாமா என மாநகராட்சி ஆலோசித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மதுரை மதிச்சியம் அருகே வைகை வடகரை வைகை ஆற்றங்கரையோரம் தனியார் கட்டிடங்களுக்கு அருகே மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பசுமைப் பூங்கா ஒன்று அமைக்கிறது. சுமார் 110 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் இந்த பூங்கா அமைக்கிறது. இந்த பூங்காவை தியாகராசர் கல்லூரி பேராசிரியர் தலைமையிலான மாணவர்கள் குழு வடிவமைக்கிறது. தற்போது பூங்காவிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில், நடைபாதை, ஒய்வு இருக்கைகள், மரங்கள், புல்வெளித் தரைகள் போன்றவை அமைகின்றன. ஆற்றங்கரையையொட்டி இப்பகுதியில் அமையும் இந்த பூங்காவில் அப்பகுதியில் தனியாரின் நிரந்தர ஆக்கிரமிப்பிற்கு வழிஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக செல்வதற்காகவே நான்குவழிச் சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், தற்போது ஆக்கிரமிப்புகளுக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் அவற்றை அகற்றாமல் பூங்கா அமைக்கப்படுவதாகவும், இந்த பூங்கா மதிச்சியம் பகுதி ஆற்றங்கரையில் அமைவதால் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் பிரநிதிகள் குரல் எழுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்குவழிச் சாலையை தொடர்ச்சியாக ஆற்றங்கரையோரமே அமைக்கவும், பூங்காக்கள் அமைப்பதை மறுபரீசிலனை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பூங்கா அமையும் இடத்தில் எந்த ஆக்கிரமிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துப் பகுதியும் கவர் செய்யப்படுகிறது. காலி இடங்களில் கழிப்பிட அறையும் அமைக்க ஏற்பாடு நடக்கிறது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x