Published : 16 Mar 2022 01:55 PM
Last Updated : 16 Mar 2022 01:55 PM
சென்னை: நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகனது திருமண விழா திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவான்மியூரில் இன்று நடைபெற்றுது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேருவின் கட்சி சார்ந்த பணிகள் குறித்து பாராட்டி பேசினார். அவரது சகோதரர் இடத்தில் ராமஜெயம் இல்லையே என்ற ஏக்கம் நேருவிற்கு மட்டுமல்ல, அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் இருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து ராமஜெயத்தின் சிறப்புகள் மற்றும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பின்னர் முதல்வர் பேசுகையில், "நேற்றைய தினம் நமக்கு ஒரு செய்தி. முதல்கட்டமாக வெற்றிச் செய்தி கிடைத்திருக்கிறது. அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏழை ,எளிய - நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் நீட் தேர்விற்கு விலக்கு பெற வேண்டும். அதற்குச் சட்ட முன்வடிவைச் சட்டமன்றத்தில் இயற்றி நாம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பல மாதங்கள் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு திடீரென்று ஒருநாள் அதைத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள். அதனால் உடனடியாக அடுத்து சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் ஒரு தீர்மானத்தைப் போட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.
இது நேற்றுவரையில் எங்களுக்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற செய்தி கிடைக்கவில்லை. அதனால் நேற்றைய தினம் நான், துரைமுருகன் , பொன்முடி , தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் எல்லாம் ஆளுநரை சந்தித்து அந்தக் கோப்பைப் பற்றி விசாரித்தோம். விசாரித்தபோது அவர் என்ன சொன்னார் என்றால், ‘எனக்கும் சட்டம் தெரியும். இரண்டாவது முறை நான் அதைத் திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாது. நான் ஜனாதிபதிக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும் வேறு வழி கிடையாது’ என்று சொன்னார்.
எனவே முதற்படியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைக்கும் சொல்கிறேன், விரைவில் அந்த நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நேற்றைக்குக் கூட நாடாளுமன்றத்தில் நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு இதுபற்றி விளக்கமாகவும், விரிவாகவும் பேசி, அங்கு இருக்கும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அது இன்றைக்குப் பத்திரிகைகளில் செய்திகளாக வந்திருக்கின்றன.
அப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின் அமைச்சரவையில் இடம் பெற்று, மிகச் சிறப்பாக பணியாற்றி, இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களில் ஒருவராக, நேரு விளங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றபோது உங்களோடு சேர்ந்து நானும் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT