Published : 16 Mar 2022 01:11 PM
Last Updated : 16 Mar 2022 01:11 PM
சென்னை: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பட்ஜெட்டினை மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அறிவிப்பாரா என எதிர்பார்ப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சி துணைத் தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மக்களின் நிதி நிலையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டுவதும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதும், இந்த நேரத்தில் நம் கடமையாகிறது.
பெட்ரோல், டீசல் விலைகளை மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் குறைக்கும் என்று சொன்னது சொன்னதாகவே இருக்கிறது, அரசு விலையைக் குறைக்கும் என்ற நம்பிக்கை தான் குறைந்து வருகிறது. நம் நாட்டிற்குள்ளாகவே பல மாநிலங்கள் இந்த விலைக் குறைப்பைத் தாங்களாகவே முன்னெடுத்திருக்கும் போது, தமிழகம் இன்னமும் நிறுத்தி வைத்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
இடையில் காய்கறிகளை நினைத்தாலே பசி மறந்து போகுமளவுக்கு எங்கோ கைக்கெட்டாத உயரத்தில் இருந்த விலைவாசியை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடாது. ஒருபுறம் விவசாயிகளையும் மறுபுறம் விவசாயப் பொருட்களை நுகர்வோரையும் சமமாகப் பாதிக்கும் இத்தகைய நிலையைத் தவிர்க்க இந்த பட்ஜெட்டில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுமா என்கிற கேள்வியை முன்வைக்கிறோம்.
வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டாலும், அதை மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதை நோக்கிய எந்தத் திட்டமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் நேரத்து வாக்குறுதி என்ற புதிய வகை வாக்குறுதியைக் களைந்து, அவற்றை மெய்ப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறோம்.
பள்ளிக் கல்வித் துறையில் புதிய ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் நியமனம் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய, புதிய சவால்கள் முன்வைக்கப்படுகின்றன,
ஆனால் இவற்றால் மாணவர்களின் கல்வி நிலை மேம்பாட்டிற்கு யாதொரு பயனும் இல்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பலர் பாதியில் படிப்பை நிறுத்தும் சூழல் இன்றும் தொடர்கிறது. இதை எதிர்கொள்வதற்கான வலிமையான திட்டங்களை அரசாங்கம் சற்றும் தாமதிக்காமல் வகுத்து, வருங்கால குடிமக்களை சரியான திசையில் பயணிக்கச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் கட்டித் தருவது எழுத்தளவிலேயே இருக்கிறது. அதைப் பற்றிய பேச்சுக்களே எழவில்லை எனும்போது செயல்படுத்துவதற்கு இன்னும் எத்தனை காலம் தேவைப்படுமோ என்னும் ஐயம் எழுகிறது. போலவே, சிவகங்கையில் அமைக்கப்போவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட அருங்காட்சியகம் இப்போது எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.
சாலைப் போக்குவரத்து, குறிப்பாக சென்னையில், வசதி என்ற நிலையிலிருந்து அசதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. புதிது புதிதாக சாலைகளில் பள்ளங்கள் தோன்றுவதும், திடீர் திடீரென்று பாதைகள் ஒருவழிப்பாதை ஆவதும், அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளில் ஏகப்பட்ட குளறுபடிகளும் உருவாகியுள்ளன. மெட்ரோ ரயில் பணிக்காகவோ, மேம்பாலப் பணிக்காகவோ, போக்குவரத்தைத் திசை திருப்புகையில் மாற்றுச் சாலைகளின் விரிவாக்கத்துக்கும், தரத்துக்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும், அதற்கான நிதி கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
மின்சாரக் கட்டணம் மாதாமாதம் கணக்கெடுக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுக்கும்போது அவர்களிடமே கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் தேர்தல் சமயத்தில் சொல்லப்பட்டது, இப்போது தொடங்கும் அப்போது தொடங்கும் என்று மாதாமாதம் மக்கள் எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது. இரண்டு மாதங்களுக்கொரு முறை கணக்கெடுப்பதால் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுடன் பல இடங்களில் மின்வெட்டு சிக்கலும் இருப்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாடு, உழவர் சந்தை சீரமைப்பு, ஊழலற்ற நிர்வாகத்துக்கான வெளிப்படையான ஆட்சிமுறை, ஊரக வேலைவாய்ப்பு, வேளாண் மகளிருக்கான மானியம், நீர் நிலைகளின் சுத்திகரிப்பு, ஆகிய திட்டங்கள் தொடங்கவும் செயலாற்றவும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
மேற்கண்ட எல்லாவற்றையும் வெறும் பெயரளவிலோ, எழுத்தளவிலோ, திட்ட அளவிலோ நிறுத்திவிடாமல், எந்தத் தேதியில் இவை செயலாக்கம் பெறும் என்பதை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க அரசாங்கம் ஆவன செய்யுமென்றும், அறிவிக்கப்பட்ட தேதியில் செயலாக்கம் பெறுவதை இப்படியான நினைவூட்டல்கள் ஏதுமின்றி அரசாங்கமே முன்வந்து உறுதிப்படுத்திக் கொடுக்கும் என்றும் மார்ச் 18 அன்று நிதியமைச்சர் அறிவிப்பார் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களின் சார்பாக எதிர்பார்க்கிறது, கேட்டுக்கொள்கிறது" என்று கட்சி சார்பில் துணைத் தலைவர் தங்கவேலு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT