Last Updated : 19 Apr, 2016 05:04 PM

 

Published : 19 Apr 2016 05:04 PM
Last Updated : 19 Apr 2016 05:04 PM

கட்சியினரிடையே அதிருப்தி அதிகரித்ததால் பாளை. தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்

பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மகன் உசேன் மாற்றப்பட்டு, புதிய வேட்பாளராக ஹைதர் அலி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக தொகுதி யில் சுற்றுப்பயணம் செய்து வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தமிழ்மகன் உசேன், திடீரென மாற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்களை கட்சி வட்டாரங்கள் பட்டியலிடுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 9-ம் தேதி அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகம் திறந்து பிரச்சாரத்தைத் தொடங்கினர். தனது பிரச்சாரத்தைத் தொடங்கும் முன் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் விநாயகர், சுப்பிரமணியர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் தமிழ்மகன் உசேன் பங்கேற்றார்.

அடுத்தடுத்த நாட்களில் தமிழ் மகன் உசேனுக்கு கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்காத விவகாரம் கட்சிக்குள் பெரிதாக வெடித்தது. நிர்வாகிகளை அழைத்துப் பேசிய மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன், கட்சித் தலைமை அறிவித்துள்ள வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று அறி வுறுத்தினார். அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்மகன் உசேனும் கேட்டுக்கொண்டார்.

வெளியூர் வேட்பாளர்

ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனை, பாளையங்கோட்டை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியிருப்பதற்கு அதிருப்தி தெரிவித்து கட்சி தலைமைக்கு சிலர் புகார்களை அனுப்பியிருந்தனர். வேட்பாளரை மாற்றக்கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது.

மேலும், `தமிழ்மகன் உசேன் உருது பேசும் முஸ்லீம். இவர் களுடன் பெரும்பாலும் மேலப் பாளையத்தை சேர்ந்தவர்கள் சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். இதன் காரணமாக தமிழ்மகன் உசேனுக்கு மேலப் பாளையம் முஸ்லீம்களின் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும்’ என உளவுத்துறை அதிகாரிகள் அதிமுக தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இவருக்கே இந்த நிலையா?

இதனிடையே நேற்று முன்தினம் பாளையங்கோட்டை தொகுதி மதிமுக வேட்பாளர் நிஜாம் வாக்குச்சேகரிப்பின்போது, அவ்வழியாக வந்த தமிழ்மகன் உசேனுக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்தார்.

இந்நிலையில்தான் தற்போது தமிழ்மகன் உசேன் மாற்றப்பட்டு, புதிய வேட்பாளராக ஹைதர் அலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் வேட்பாளர் களைத் தேர்வு செய்ய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேர்காணல் நடத்திய நிர்வாகிகள் குழுவில் தமிழ்மகன் உசேனும் இடம்பெற்றிருந்தார்.மற்ற வேட்பாளர்களையெல் லாம் தேர்வு செய்யும் குழு விலிருந்தவரே, இப்போது மாற்றப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x