Published : 16 Mar 2022 04:15 AM
Last Updated : 16 Mar 2022 04:15 AM
புதுச்சேரி கடற்கரையையொட்டி ரூ.13 கோடியில் நட்சத்திர அந்தஸ்துடன் கட்டப்பட்டு வரும் கலாச்சார மையம், அதில் விழாக்கள் நடத்தும் அரங்கம், கடல் அழகை ரசிக்கும் வகையில் அறைகள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு மாதங்களில் இப்பணி நிறைவடையும் என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.
புதுச்சேரி கடற்கரை சாலையின் இறுதியில் அரசின் சாராய வடி ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை வில்லியனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் கால் நூற்றாண்டாக இயங்காமல் இருந்தது. இதனால் அந்த இடம் மோசமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில் சுற்றுலா மேம்பாட்டுக்காக அப்பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்த இடத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகையில் கலாச்சார மையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் ரூ.13 கோடி செலவில் தொடங்கி நடந்து வந்தது. இப்போது பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 6 ஆயிரம்சதுரமீட்டரில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் விழாக்கள் நடத்தும் வகையில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அறைகளும் கடல் அழகை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் திறந்த வெளிதிரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் அறையில் தங்குபவர்கள் கடல் அழகை அருகே சென்று பார்க்கும் வகையிலும் கட்டுமானப்பணி நடந்துள்ளது. தற்போது கட்டிடத்துக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பொதுப் பணித்துறை நிர்வாக பொறியாளர் ஏழுமலை கட்டிட அமைப்பு குறித்து விளக்கினார். அனைத்து பகுதிக்கும் சென்று அனைவரும் பார்வையிட்டனர்.
பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “கட்டிடப்பணி இரு மாதங்களில் நிறைவடையும். இக்கட்டிடத்தை அரசே நடத்தலாமா அல்லது தனியாரிடம் தரலாமா என்று ஆலோசித்து வருகிறோம். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அழகிய கட்டிடமாக உருவாகிய இப்பகுதியை மேலும் அழகுப்படுத்துவோம். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்” என்று குறிப்பிட்டார்.
‘உக்ரைனில் இருந்து புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் திரும்பி விட்டார்களா? ’ என்று கேட்டதற்கு, “அனைவரும் வந்து விட்டனர்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT