Published : 15 Mar 2022 05:32 PM
Last Updated : 15 Mar 2022 05:32 PM

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்: பக்தர்கள் செல்ல 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி

பிரதிநிதித்துவப் படம்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் தொடங்கியபோது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் முதன் முறையாக தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மேலும் கிரிவலம் செல்ல முயலும் பக்தர்களை தடுக்க, கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கிரிவலம் மீதான தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்தது.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்துக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரத்தில், தீபத்தைத் தொடர்ந்து வந்த பவுர்ணமி நாளிலும் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபட்டனர். அதன்பிறகு, பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மீண்டும் தடை விதித்தார். அதேநேரத்தில், ஆட்சியரின் தடை உத்தரவை தகர்த்தெறிந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அவர்களை தடுத்து வந்த காவல்துறையினரும், பக்தர்களின் எழுச்சியால் பின்வாங்கினர்.

கரோனா தொற்று வெகுவாக குறைந்து தமிழகத்தில் இயல்பு நிலையில் உள்ளபோது பவுர்ணமி கிரிவலத்துக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பங்குனி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல தடை விதிக்கக்கூடாது என பக்தர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், பவுர்ணமி கிரிவலத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வந்த தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சயிர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ''கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பவுர்ணமி கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அரசு தெரிவிக்கப்பட்டுள்ள கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் செல்லலாம்.

மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்'' என தெரிவித்துள்ளார். கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x