Published : 15 Mar 2022 04:04 PM
Last Updated : 15 Mar 2022 04:04 PM
சென்னை: சென்னை, ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையத்தை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15.3.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்தியாவில் மாநில அரசு மருத்துவமனைகளில் முதலாவதாக சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், 34 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை (Advanced Robotic Surgery Centre)திறந்து வைத்தார்.
இந்த அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையம் வாயிலாக அறுவை சிகிச்சை நிபுணர்களால், கடினமான அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாகவும் நுணுக்கமாகவும், ரோபோடிக் கருவிகள் மூலம் மேற்கொள்ள இயலும். லேபராஸ்கோபியின் அதிநவீன முன்னேற்றமே ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆகும்.
அறுவை சிகிச்சையின் போது உறுப்புகளை அகற்ற நேரிட்டால் அவற்றின் ரத்த நாளங்களின் ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் ரத்த இழப்பினை தடுத்து பலவீனமடைந்த உறுப்பினை அகற்ற முடியும். அப்படி செய்யும்போது அதன் நரம்பு நாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றை திறம்பட செயல்படுத்த 3D விரிவாக்கம் அவசியமாகிறது. இதற்கு இந்த நவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை உதவும். அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் 120 டிகிரி மட்டுமே சுழன்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் நிலையில், ரோபோடிக் சிகிச்சையில் உள்ள ENDO WRIST மூலம் 360 டிகிரி வரை சுழன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
மேலும், இதில் 3D விரிவாக்கம் உள்ளதால் மிக எளிதில் துல்லியமாக நாளங்களின் அமைப்புகளை கண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலும். ரோபோடிக் அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் உடம்பில் சிறிய தழும்புகளே ஏற்படுவதால், ரத்த இழப்பு, வலி மற்றும் நோய்த்தொற்று (Post operative Infection) பெரிதும் குறைவதோடு, அறுவை சிகிச்சையின் பின் வலி நிவாரண ஊசிகள் அதிகம் தேவைப்படுவதில்லை. மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பலாம். சிறுநீரக அறுவை சிகிச்சை, குடல்நோய் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை ஆகிய அறுவை சிகிச்சைகளுக்கு இந்த அதிநவீன இயந்திரம் பயன்படும்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர். மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் / சிறப்பு பணி அலுவலர் முனைவர் ப. செந்தில்குமார். இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத் தலைவர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர், மரு. நாராயணபாபு, தமிழ்நாடு பன்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை இயக்குநர் மரு. விமலா, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஜெயந்தி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment