Published : 15 Mar 2022 12:48 PM
Last Updated : 15 Mar 2022 12:48 PM
சென்னை: சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரின் மகன் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாவரசு கொலை வழக்கு: சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மகன் நாவரசு கடந்த 1996-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான புகாரை விசாரித்த போலீசார் அதே கல்லூரியில் படித்த சீனியர் மாணவர் ஜான் டேவிட்டை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
ஜான் டேவிட் விடுதலை: இதை எதிர்த்து ஜான் டேவிட் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
தமிழக அரசு மேல்முறையீடு: இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.ஜான் டேவிட் உடனடியாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜான் டேவிட் சரணடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மனு நிராகரிப்பு: இந்த நிலையில், தனது மகனை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரி ஜான் டேவிட்டின் தாய் எஸ்தர் தமிழக அரசிடம் முறையிட்டார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனு தள்ளுபடி: இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் டேவிட்டுக்கு சிறை நிர்வாகம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. தருமபுரி பேருந்து எரிப்பு, மேலவளவு படுகொலை போன்ற கொடூரக் குற்ற வழக்குகளில் கைதான குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஜான் டேவிட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முன் கூட்டியே விடுதலை என்பதை மனுதாரர், உரிமையாக கோர முடியாது. இது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மற்றவர்களை விடுதலை செய்துள்ளதால் அதே வாய்ப்பை தனக்கும் வழங்க வேண்டும் என்று கோர முடியாது என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் உத்தரவில் தலையிட முடியாது என கூறி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT