Last Updated : 15 Mar, 2022 11:52 AM

 

Published : 15 Mar 2022 11:52 AM
Last Updated : 15 Mar 2022 11:52 AM

எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்குள் போலீஸார் சுவர் ஏறிக்குதித்து நுழைந்ததாக அதிமுகவினர் ரகளை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். | படம்: ஜெ.மனோகரன்

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுச் சுவர் ஏறிக்குதித்து போலீஸார் உள்ளே நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட கோவையில் 41 இடங்கள் என தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணியின் வீட்டுக்கு சோதனை நடத்துவதற்காக இன்று காலை ஒரு ஜீப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 5 பேர் வந்தனர். சோதனை நடத்த உள்ளே செல்ல வேண்டும் என அவர்கள் வீட்டின் காவலாளியிடம் தெரிவித்து உள்ளனர். காவலாளி உள்ளே விட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து உள்ளே போலீஸார் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு வந்த அதிமுகவினர் சிலரும் வீட்டுக்குள் நுழைந்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அங்கு வந்து அதிமுகவினரை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இரண்டு பேர் வேலுமணியின் வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் எனத் தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்.எல்.ஏக்கள் பேட்டி: முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் இருந்து வெளியே வந்த அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ கூறும்போது,"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இதனை மறைப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி. அதை உடைப்பதற்காக இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சாதாரண தொண்டர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்கின்றனர். இதனால் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம். விழுந்துவிட மாட்டோம். அதிமுகவை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள். சோதனைக்கு வந்த அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உள்ளனர். காவலாளியிடம் அவர்கள் கூறியிருந்தால் உள்ளே அனுமதித்து இருப்பார்கள்" என்றார்.

வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி கூறும்போது, "வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவோம். கோவை அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். இதுபோன்ற சோதனைகளுக்கு நாங்கள் பயந்துவிடமாட்டோம். எவ்வளவு வழக்குகள் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x