Published : 15 Mar 2022 05:32 AM
Last Updated : 15 Mar 2022 05:32 AM

சென்னை அருகே குரோம்பேட்டையில் ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையம் திறப்பு: மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். உடன் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா, ஜெ.ஆர்.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜெ.நிஷா உள்ளிட்டோர்.

சென்னை: சென்னை அருகே குரோம்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

சென்னை அருகே குரோம்பேட்டையில் புதிதாக ரேலா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடங்க விழா நேற்று நடைபெற்றது. இதில்முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புற்றுநோய் மையத்தைதிறந்துவைத்தார். தொடர்ந்து, அந்த மையத்தை முதல்வர் பார்வையிட்டார்.

டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா, புதியமருத்துவமனையில் உள்ள அதிநவீன மருத்துவ வசதிகள் குறித்து முதல்வரிடம் விளக்கினார்.

முன்னதாக நடைபெற்ற மருத்துவமனையின் தொடக்க விழாவில், பேராசிரியர் முகமது ரேலா வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மருத்துவ சிகிச்சை தலைநகரம்

இந்தியாவின் மருத்துவ சிகிச்சையின் தலைநகரமாக சென்னை திகழ்ந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் புற்றுநோய் சிகிச்சை பெற சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த புற்றுநோய் மையம் சென்னையின் மற்றொரு அடையாளமாகத் திகழும்.

உலகில் 100 பேரில் 33 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். குடிப்பழக்கம், புகைபிடித்தல், உடல் பருமன், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக புற்றுநோய் வருகிறது. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புற்றுநோய் மையத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் அதிநவீன சிகிச்சை அளிக்கப்படும். அதனால் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் நாட்டின் பிற மாநில மக்களும் பெரிதும் பயன்பெறுவர்.

அதிநவீன வசதிகள்

அதிநவீன ரேடியேஷன் ஆன்காலஜி, ரோபாட்டிக் ஆன்காலஜி, அறுவை சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் இங்குள்ளன. மேலும் பெட் ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இங்கு இருப்பது சிறப்பு. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு முகமது ரேலா தெரிவித்தார்.

இவ்விழாவில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஜெகத்ரட்சகன் எம்பி., ஜே.ஆர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா, டாக்டர்அனுசுயா பவுண்டேஷன் அறங்காவலர்கள் ஜெ.எல்.ஸ்ரீரக் ஷிகா, இ.ஸ்ரீரித்விகா, மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x