Published : 15 Mar 2022 10:36 AM
Last Updated : 15 Mar 2022 10:36 AM

கள்ளக்குறிச்சி: ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 173-வது முறையாக மனு

173-வது முறையாக மனு அளித்து, கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் ஆக்கிர மிப்பு பற்றி விளக்கும் விவசாயி காந்தி.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 305 மனுக்களை ஆட்சியர் பெற்றார். அந்தமனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உரிய அலுவலர்களிடம் அறிவு றுத்தினார்.

இந்த குறைதீர்க்கும் முகாமிற்கு மனுவுடன் வந்திருந்த புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவர், “கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள தெட்டுக்காடு எனுமிடத்தில் நீர்வழி ஓடையை தனி நபர் ஒருவர் அவரது நிலத்திற்கு செல்வதற்காக ஆக்கிரமித்து பாதை அமைத்துள்ளார். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஊருக்குள் வெள்ள நீர் வந்து, பாதிப்பை ஏற்படுத்துகிறது’‘ என்று கூறி, அதை குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்தார்.

“இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடந்த 2019 முதல் விழுப்புரம் ஆட்சியரிடம் 31 முறையும், கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் 7 முறையும், சங்கராபுரம் வட்டாட்சியரிடம் 63 முறையும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் 3 முறையும்,கள்ளக்குறிச்சி சார் ஆட்சியரிடம் 23 முறையும், சங்கராபுரம் வருவாய் ஆய்வாளரிடம் 13 முறையும், கிராம நிர்வாக அலுவலரிடம் 8 முறையும், ஊராட்சி இயக்குர், வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு தலா ஒரு முறையும், சேராப்பட்டு ஜமாபந்தியில் 2 முறையும் என 172 முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. 173 -வது முறையாக தங்களிடம் மனு அளிக்கிறேன்” என்று மனுதாரர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்டு ஆட்சியர் விசாரணைக்காக அதை தன்னிடமே வைத்துக் கொண்டார். இதுகுறித்து சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரிடம் கேட்டபோது, மனு குறித்த தகவல்கள் கிடைத்த பின்னர் அது குறித்து கூறுவதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x