Published : 15 Mar 2022 04:00 AM
Last Updated : 15 Mar 2022 04:00 AM

தி.மலை அரசு மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்களின் வகுப்பு தொடக்க விழாவில் பேசும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அருகில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, துணைத் தலைவர் குமரன் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

தி.மலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலா மாண்டு மாணவர்களின் வகுப்பு தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி இயக்குநர் கம்பன் வரவேற்றார். சங்கரி வேலு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜெயக் குமார் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்துப் பேசும் போது, “திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க மிகுந்த சிரமப்பட்டுள்ளேன். இக்கல்லூரிக்கு உள்ள தேவைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மனுவாக கொடுத்துள்ளேன். தேவைகள் நிறைவேறினால், ஏழை மக்களுக்கு பயனுள்ள மருத்துவக் கல்லூரியாக அமையும்.

படிக்காத பாடத் திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட நீட் தேர்வை சிரமப்பட்டு படித்து வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன். நீங்கள் பனிரெண்டு ஆண்டுகள் படித்த படிப்பு, பிற்போக்குவாதிகளால் ஒதுக்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாக வரக் கூடாது என ஒரு சக்தி எண்ணுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். முதல் வரின் கனவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிறைவேற் றுவார்” என்றார்.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சிறப்புரையாற்றி பேசும்போது, “தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் விருப்பம். ஆனால், தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி இல்லாமல் உள்ளன. அங்கு கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் அங்கீகாரம் பெற்று விடுவோம்.

முதல்வரின் அதி தீவிர நடவடிக்கை யால், கரோனா உயிரிழப்பு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு 95 என உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தி சிறந்த ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தி யதின் பேரில், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த நிதியாண்டில் இருதய நோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்படும். மேலும், மாவட்டத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்படும். அருணை கல்வி குழு வளாகம் பாதுகாப்பானது என்பதால், அச்சமின்றி மாணவர்கள் கல்வி கற்கலாம்” என்றார்.

இதில், துணை தலைவர் குமரன், துணை இயக்குநர் முகமது சாயீ, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணா துரை உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மருத்துவக் கல்லூரி கண் காணிப்பாளர் குப்புராஜ் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x