Published : 15 Mar 2022 11:15 AM
Last Updated : 15 Mar 2022 11:15 AM

பாலியப்பட்டு சிப்காட்டுக்கு எதிராக போராடும் மக்கள்... மார்க்சிஸ்ட் மவுனம் ஏன்? - இயக்குநர் லெனின்பாரதி கேள்வி

திருவண்ணாமலை

தி.மலை அடுத்த பாலியப்பட்டு ஊராட்சியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து மக்களும், விவசாயிகளும் போராடி வரும் நிலையில் அரசை கண்டிக்காமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மவுனமாக இருப்பது ஏன்? என திரைப்பட இயக்குநரும், முற்போக்கு சிந்தனையாளருமான லெனின்பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மலை அடுத்த பாலியப்பட்டு ஊராட்சியை மையமாக கொண்டு சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க, தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, விவசாயிகளின் 1,200 ஏக்கர் விவ சாய நிலம் மற்றும் 500 வீடுகளை கையகப்படுத்துவதற்காக, முதற்கட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் 84-வது நாளை எட்டியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் தொடங்கப்பட்டது. மேலும் காத்திருப்பு போராட்டம், கருப்புக் கொடி போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம், கருப்பு பொங்கல் போராட்டம், நீராதாரம் உள்ளதாக கூறி மீன் பிடிக்கும் போராட்டம், மனித சங்கிலி போராட்டம் என பல வகைகளில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. கிராம சபை கூட்டத்தை கூட்டி, சிப்காட் தேவையில்லை என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிப்காட் தொடர்பாக கேள்விகளை எழுப்பி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ், சீமான் கண்டனம்

கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கொளத்தூர் மணி, பியூஷ் மனுஷ் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர், நேரிடையாக களத்தில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதேபோல் போராட்ட களத்துக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர், சிப்காட் கொண்டு வர திட்டமிட்டுள்ள தமிழக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

விருதை திருப்பி அளிக்கிறேன்

இந்நிலையில், சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களின் ஒருவரான, திரைப்பட இயக்குநர் மற்றும் முற்போக்கு சிந்தனையாளருமான லெனின் பாரதி, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு’ எதிராக சமீபத்தில் டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “இப்படி எல்லா வற்றையும் பார்த்துவிட்டு, படித்துவிட்டு வசதியாக கடந்து போய்விடுங்கள் தோழர்களே. நீங்கள் கடந்து போவது ஜனநாயகத்தையும், முற்போக்கையும், மக்களையும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம். மக்கள் பிரச்சினையில் அரசை கண்டிக்காமல் மவுனமாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறேன். சகல வல்லமை கொண்டவர்களுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிடுகிறது. குரலற்ற மக்கள் பிரச்சினையில் ஒரு அறிக்கையை கொடுக்க வைக்க 60 நாட்கள் கெஞ்ச வேண்டி உள்ளது. மக்களை மறந்து நழுவி ஒதுங்கும் தமுஎகச அளித்த விருதை (மேற்கு தொடர்ச்சி மலை படத்துக்காக 2018-ல் வழங்கியது) திருப்பி அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

வாழ்த்தி மட்டும் பேசும் சிபிஎம்

இது தொடர்பாக லெனின் பாரதியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்ந்து இல்லாமல் மக்களே போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள், அடித்தட்டு மக்கள் பிரச்சினைக்கு கண்டன குரல் எழுப்பும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிப்காட் போராட்டத்தை வாழ்த்தி மட்டும் பேசுகிறது. அதிகாரபூர்வமான பங்கேடுப்பு செய்யவில்லை. மவுனம் காக்கிறது.இதனால், தமுஎகச கடந்த 2018-ல் அறிவித்த விருதை திருப்பி அளிக்கிறேன். சிப்காட் அமைவதால் பாலியப்பட்டு ஊராட்சி மட்டுமில்லாமல் இரும்பு தாது நிறைந்துள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலைக்கும்ஆபத்துள்ளது. எனவே, இம்மலைகளை சுற்றி உள்ள 55 கிராமங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க மக்கள் வலியுறுத் துகின்றனர்.

திமுகவின் 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 43-வது வரிசையில், விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடுத்திட நடவடிக்கை மேற்கொண்டு விளை நிலங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு செயல்பட வேண்டும். சிப்காட் தொழிற்சாலைக்கு பதிலாக பூக்கள் மற்றும் மணிலா உற்பத்தி அதிகம் உள்ளதால், வாசனை திரவிய தொழிற்சாலை மற்றும் மணிலா எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க வேண்டும்” என்றார்.

மக்களுக்கு துணை நிற்போம்

இயக்குநர் லெனின் பாரதியின் ஆதங்கம் குறித்து, தி.மலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் எம்.சிவக்குமாரிடம் கேட்டபோது, “விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்காது. அதே நேரத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக தொழிற்பேட்டை தேவை. அதனை மக்கள் மற்றும்விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்றுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறோம். மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாங்கள் நேரிடையாக பங்கேற்கவில்லை. மக்களையும் விவசாயிகளையும் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பேசி ஆதரித்து வருகின்றனர்.

சிப்காட் அமைக்க 80 சதவீத மக்களின் எதிர்ப்பு உள்ளது. இதுவரை சிப்காட் தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதற்கு முன்பாக, அழுத்தமான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பாலியப்பட்டில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தால், நாங்கள் வலுவாக எதிர்ப்போம். விவசாய மக்களுக்கு துணை நிற்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான நிலைபாடு கொண்டிருப்பவர் இயக்குநர் லெனின் பாரதி. பஞ்சமி நிலம் மீட்பு மற்றும் தேவிகாபுரத்தில் 13-ம் நாள் உற்சவத்தை பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்க வேண்டும் என போராடுகிறோம். ஆனால், அங்கெல்லாம் இயக்குநர் லெனின்பாரதி வரவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x