Published : 14 Mar 2022 07:08 PM
Last Updated : 14 Mar 2022 07:08 PM
திருச்சி: ”தமிழக மக்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்காமல் உண்மையான திராவிட மாடல் ஆட்சியை அளித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. ஆனால், திமுகதான் திராவிட மாடல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார்” என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார்.
மேகேதாட்டு அணைக் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதைக் கண்டித்தும், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், மேகேதாட்டுவில் அணைக் கட்டக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமையேற்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசியது:
"திமுக ஆட்சிக் காலங்களில் தமிழக மக்களின் உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும். 1970-ல் காவிரியின் துணை நதியான ஹேமாவதியில் கர்நாடக அரசு அணைக் கட்டியபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது, 1972-ல் காவிரி பிரச்சினை தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கு திரும்பப் பெற்றது, 1974-ல் காவிரி தொடர்பாக ஒப்பந்தம் காலாவதியானபோது அதைப் புதுப்பிக்க தவறியது, 1998-ல் காவிரி நதிநீர் ஆணையம் உருவாக்கும்போது அமைதியாக இருந்தது, 2007-ல் காவிரி ஆணையத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என தமிழக மக்களையும், விவசாயிகளையும் திமுக தொடர்ந்து வஞ்சித்து வந்துள்ளது.
அந்தவகையில், திமுக தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மேகேதாட்டுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அணைக் கட்ட அனுமதி அளித்துவிட்டால் தமிழகம் சோமாலியாகவாக மாறிவிடும். தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாக செயல்பட்டு, அணைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பல்வேறு நாடுகள் அணைக் கட்டுவதற்குப் பதிலாக, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைத் திட்டமிட்டு வருகின்றன. இது, மத்திய அரசுக்கும் தெரியும். காடுகளை வளர்த்தால் நதிகள் உருவாகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளை அதிகரிக்கும் வகையிலும், நீராதாரத்தைப் பெருக்கும் வகையிலும் காடுகள் வளர்ப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். கர்நாடக பாஜக அரசிடம் அணைக் கட்டும் நடவடிக்கையைக் கைவிட்டு, காடுகள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். கர்நாடக அரசு அணைக் கட்ட மத்திய அரசு ஆதரவு அளித்து அரசியல் தவறை செய்துவிடக் கூடாது.
சமூக நீதியைக் காத்துடன், தமிழக மக்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்காமல் உண்மையான திராவிட மாடல் ஆட்சியை அளித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. ஆனால், திமுகதான் திராவிட மாடல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். ஜெயலலிதாவின் கொள்கைகளை மக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்லவும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காகவுமே அமமுக தொடங்கப்பட்டது. இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடுவோம். தேர்தல் பின்னடைவுகளால் பாதிக்கப்படமாட்டோம். மக்கள் பிரச்சினைக்காக அமமுக முதலில் நின்று போராடும். மக்களின் பிரச்சினைக்காக போராடும் ஜனநாயக போராளிகள் அமமுகவினர். அமமுகவை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொருளாளர் ஆர்.மனோகரன், மாவட்டச் செயலாளர்கள் எம்.ராஜசேகரன், டி.கலைச்செல்வன், கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பி.ஆர்.பாண்டியன், பி.அய்யாக்கண்ணு, பாலு தீட்சிதர், அகில இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ஹஸ்ரத் சாதிக் பாட்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT