Published : 14 Mar 2022 08:33 PM
Last Updated : 14 Mar 2022 08:33 PM
கோவை: "தனிப்பட்ட விதத்தில் கொள்கை மாறுபாடு இருக்கிறது என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட, அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (மார்ச் 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “புதிய கல்விக் கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எல்லா மாநிலங்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இதை ஏதோ நான் பொத்தம் பொதுவாக கூறவில்லை.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையிலும், தொடர்ந்து கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளதன் அடிப்படையிலும் இதைக் கூறுகிறேன். உலகில் உள்ள சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் நமது நாட்டில் உள்ள கல்லூரிகள் இடம்பெறுவது சிரமமாக உள்ளது. எனவே, இந்தப் புதிய கல்விக் கொள்கையினால்தான் நாம் முன்னேற முடியும்.
அதுமட்டுமல்ல தாய்மொழிக் கல்விக்கும் புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. அதேபோல குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. தனிப்பட்ட விதத்தில் கொள்கை மாறுபாடு இருக்கிறது என்பதற்காக, இதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட, அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திய மாணவர்கள் உலக அரங்கில் மிக பிரமாண்டமான ஒரு நிலையை அடைவதற்கு புதிய கல்விக் கொள்கை உதவி செய்யும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...