Published : 14 Mar 2022 03:01 PM
Last Updated : 14 Mar 2022 03:01 PM

இறந்த தம்பிக்காக ரூ.5 லட்சத்தில் சிலை செய்து குழந்தைகளுக்கு காதணி விழா நடத்திய சகோதரி

ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவச்சிலையின் மடியில் அமரவைக்கப்பட்டு நடத்தப்பட்ட காதணிவிழா. 

ஒட்டன்சத்திரம்: இறந்த தனது தம்பியை தனது மகள் காதணிவிழாவில் பங்கேற்கசெய்யும் விதமாக ரூ.5 லட்சத்தில் தம்பியின் சிலையை வடித்து, அதன் மடியில் குழந்தைகளை அமரவைத்து தனது தம்பியின் 'தாய்மாமன் கனவை' நிறைவேற்றியுள்ளார் அவரது சகோதரி பிரியதர்ஷினி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி-பசுங்கிளி தம்பதியரின் மகன் பாண்டித்துரை. இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 21. பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகாஸ்ரீ. மகன் மோனேஷ்குமரன் ஆகியோர் மீது பாண்டித்துரை அளவு கடந்த பாசம் வைத்திருந்துள்ளார். தனது அக்கா குழந்தைகளுக்கு தனது மடியின் வைத்து காதணிவிழா நடத்தவேண்டும் என அடிக்கடி கூறிவந்துள்ளார்.

காதணி விழாவிற்கு ஏற்பாடுகள் செய்த நிலையில் பாண்டித்துரை விபத்தில் இறந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒட்டன்சத்திரத்தில் குழந்தைகளின் காதணிவிழா நடைபெற்றது. தனது தம்பியின் ஆசையை பூர்த்திசெய்யும் வகையில், பாண்டித்துரையின் உருவத்தை சிலிக்கன் மூலம் சிலையாக செய்து காதணிவிழாவில் பங்கேற்க செய்தார் அவரது சகோதரி பிரியதர்ஷினி. இது விழாவிற்கு வந்த உறவினர்கள், நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தத்ரூபமாக பாண்டித்துரை வேட்டி, சட்டை, துண்டு அணிந்து சேரில் சிலையாக அமர வைக்கப்பட்டிருந்தார்.

பாண்டித்துரை சிலை வடிவில் தாய்மாமனாக வீற்றிருக்க சிலையின் மடியில் அமரவைத்து தனது குழந்தைகளுக்கு காதணிவிழா நடத்தினார் பிரியதர்ஷினி. முன்னதாக நேற்று இரவு சாரட் பூட்டிய வண்டி ஒன்றில் சிலையை அமரவைத்து ஊர்வலமாக தாய்மாமன் சீர்வரிசையை கொண்டுவந்தனர்.

இறந்த பாண்டித்துரையின் தாயார் பசுங்கிளி கூறுகையில், ''அக்கா குழந்தைகள் மீது எனது மகன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மடியில் வைத்து காதணி விழா நடைபெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த போது தான் எதிர்பாரதவிதமாக விபத்தில் உயிரிழந்தான். அவனது கனவை நனவாக்கும்வகையில், அவனது விருப்பத்தை தற்போது நிறைவேற்றியுள்ளோம். இதற்காக பெங்களூருவில் சிலை செய்பவரிடம் சொல்லி பாண்டித்துரை சிலையை ரூ.5 லட்சம் செலவில் செய்து வாங்கினோம். இதன்மூலம் என்னுடைய மகன் காதணிவிழாவில் நேரில் கலந்துகொண்ட மகிழ்ச்சி தாய், தந்தையான எங்களுக்கும் எனது மகளுக்கும் கிடைத்தது. ஆனந்த கண்ணீர் வடித்தோம். எங்களது மகன் மீண்டு எங்கள் வீட்டிற்கு வந்தது போல் இருந்தது இந்த சிலையை பார்க்கும்போது'' என்றார்.

ஒட்டன்சத்திரத்தில் நடந்த காதணிவிழாவில் ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு வந்த போது சாரட் வண்டியில் அமரவைக்கப்பட்டிருந்த தாய்மாமன் உருவச்சிலை.

ஒட்டன்சத்திரத்தில் நடந்த இந்த வினோத காதணிவிழா விழாவிற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியதோடு, தாய்மாமன் உறவை வலுப்படுத்தியாகவும் இருந்ததாக கூறிச்சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x