Last Updated : 14 Mar, 2022 01:47 PM

 

Published : 14 Mar 2022 01:47 PM
Last Updated : 14 Mar 2022 01:47 PM

இரண்டு ஆண்டுகளாக போனஸ் இல்லை; புதுச்சேரியில் அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: கிராமங்களில் பாதிப்பு

புதுச்சேரியில் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் | படம்: எம். சாம்ராஜ்

புதுச்சேரி: இரண்டு ஆண்டுகளாக போனஸ் தராததால் புதுச்சேரி அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கிராமங்களில் இருந்து நகரத்துக்கு பணிக்கு வருவோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

புதுவை அரசின் சாலை போக்குவரத்துக்கழகம் (பிஆர்டிசி) மூலம் புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப் படுகிறது. பிஆர்டிசியில் 4 பிராந்தியங்களையும் சேர்ந்த சுமார் 800 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை. தங்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கத்தின் சார்பில் பிஆர்டிசி நிர்வாகத்துக்கு போனஸ் வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நோட்டீஸ் அளித்தனர்.

அதன்பிறகும் கூட நிர்வாகத்தின் தரப்பில் தொழிலாளர்களை அழைத்துப் பேசவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், போனஸ் வழங்கக் கோரியும் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி இன்று அதிகாலை முதல் புதுவை நகரப் பகுதி, கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

பிஆர்டிசியில் கடந்த காலங்களில் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. சமீபமாக 50க்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட பஸ் 2 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை.

இந்நிலையில், ஊழியர்களின் போராட்டம் காரணமாக வழக்கமாக சென்னை, காரைக்கால், பெங்களூரு, மாகே, ஏனாம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. முன்கட்டணம் செலுத்திய பயணிகளுக்கு கட்டணத்தொகை திருப்பியளிக்கப்பட்டது. நகரப் பகுதியைப் பொறுத்தவரை டெம்போ, ஆட்டோ ஆகியவை இயக்கப்படுவதால் பெரியளவில் பாதிப்பு இல்லை. அதேநேரத்தில் தனியார் பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அரசு ஊழியர்கள், கிராமப்புறத்திலிருந்து நகரத்துக்கு பணிக்கு வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x