Last Updated : 14 Mar, 2022 11:55 AM

 

Published : 14 Mar 2022 11:55 AM
Last Updated : 14 Mar 2022 11:55 AM

புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பின் மழலையர் வகுப்புகள் திறப்பு: அரசுப் பள்ளியில் மகனைச் சேர்த்த கல்வித்துறை இயக்குநர்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் இன்று திறந்தன. இச்சூழலில் அரசுப் பள்ளியில் தனது மகனை புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் சேர்த்தார்.

புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று குறைந்துள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் முதல்முறையாக பள்ளிக்கு பெற்றோருடன் வந்தனர். அவர்களை ஆர்வமுடன் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து கரோனா நோய்த் தொற்றானது அதிகரித்ததால் படிப்படியாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அவ்வப்போது நோய்த்தொற்று குறைந்த நிலையில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளான எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மட்டும் திறக்கப்படவே இல்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே புதுச்சேரியில் நோய்த் தொற்றானது வெகு குறைவாக பதிவாகி வருவதால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மழலையர் பள்ளி திறக்க அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. காலை முதல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்குள் கொண்டு வந்து விட்டு வருகின்றனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு மழலையர் பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மழலையர் தங்களது பெற்றோருடன் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். குழந்தைகளை கதைசொல்லியும், பாட்டுபாடியும் ஆசிரியர்கள் அவர்களின் தயக்கத்தைப் போக்கும் முயற்சியை அரசு பள்ளிகளில் தொடங்கினர். பள்ளி சூழல் என்பதை காட்டாமல் விளையாட்டுக்கூடமாக வகுப்பறைகளை வடிவமைத்து இருந்தது மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் லாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தனது மனைவி மகனுடன் வந்தார். பள்ளி முதல்வர் பாஸ்கரராஜுவிடம் தனது மகனை எல்கேஜியில் சேர்க்க வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரது மகன் அஸுகோஷை பள்ளியில் சேர்த்தனர். இதுபற்றி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவிடம் கேட்டதற்கு, "கரோனா குறைவால் மழலையர் வகுப்புகளை இன்று திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தேன். எனது மகனையும் பள்ளியில் சேர்க்கலாம் என்று முடிவு எடுத்து வீட்டருகே உள்ள அரசு பள்ளியில் வந்து சேர்த்தோம். அரசுப் பள்ளிகளில் நன்றாக ஆசிரியர்கள் பாடம் சொல்லி தருகிறார்கள். தரமும் நன்றாக உள்ளது. அதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் சேர்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல்முறையாக மகன் பள்ளிக்கு வந்தது நல்ல அனுபவமாக இருந்தது" என்று குறிப்பிட்டார்.

பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரராஜுவிடம் கேட்டதற்கு, "மழலையர் வகுப்புகள் இன்று தொடங்குவதால் அதற்கான வேலைகளில் இருந்தோம். அப்போது எவ்வித அறிவிப்பும் இல்லாமல்தான் இயக்குநர் தனது மனைவி மகனுடன் வந்தார். புது மாணவர் சேர்க்கையில் குழந்தையை பள்ளியில் சேர்த்தோம். இயக்குநரின் மகன் எங்கள் பள்ளியில் சேர்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் இது முன் உதாரணமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x