Published : 14 Mar 2022 11:46 AM
Last Updated : 14 Mar 2022 11:46 AM
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறுகளை விளைவித்துக் கொண்டிருக்கும் கேரள அரசை கண்டித்துப் பேச வேண்டிய தமிழக முதல்வர் மவுனம் சாதிக்கிறார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கேரள அரசுடனான உறவு, தோழமை, நட்பு ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, உரிமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மரங்களை வெட்ட அனுமதி மறுப்பது, பேபி அணையை வலுப்படுத்தத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காதது, தமிழக அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது என தமிழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் கேரள அரசு, தற்போது அலுவலகப் பணிகளைப் பராமரிக்கத் தேவையான தளவாடப் பொருட்களைக்கூட எடுத்துச் செல்ல இடையூறு ஏற்படுத்துவதைப் பார்க்கும்போது, கேரள அரசின் உறவு தான் முக்கியம், தமிழகத்தின் உரிமை முக்கியமல்ல என்ற நிலைக்கு திமுக அரசு வந்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்ய ஏதுவாக தேக்கடியில் தமிழக பொதுப் பணித்துறையின் உப கோட்ட அலுவலகம் உள்ளது. இதனையொட்டி, பணியாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை ஆகியவையும் அங்கே உள்ளன. இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான சிமெண்ட் தகடுகள், சின்டெக்ஸ் தொட்டி, பிளாஸ்டிக் குழாய்கள், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாகனம் மூலம் தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொண்டு சென்றபோது, தேக்கடி நுழைவுப் பகுதியில் உள்ள கேரள சோதனைச் சாவடியில் அம்மாநில வனத் துறையினர் அதனை வழிமறித்து பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லையென்றும், பெரியாறு புலிகள் காப்பக இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டுமென்று தெரிவித்ததாகவும், இதுகுறித்து தமிழக அரசு அதிகாரிகள் உரிய விளக்கமளித்தும் அதை ஏற்க கேரள வனத் துறை மறுத்துள்ளது.
இதனையடுத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் அங்கேயே நாட் கணக்கில் நிறுத்தக்கூடிய துர்ப்பாக்கிய சூழ்நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
அலுவலகப் பராமரிப்புப் பணிக்குகூட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று சொல்வதும், அதற்கு வனத் துறையின் அனுமதி பெறவேண்டும் என்று கூறுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கேரள அரசின் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக் காலமாக கூட்டாட்சி குறித்தும், மாநில சுயாட்சி குறித்தும் தமிழக முதல்வர் பேசி வருகிறார். கேரள மாநிலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்ததன் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், சென்ற மாத இறுதியில் சென்னை வர்த்தக மையக் கூட்டரங்கத்தில் நடைபெற்ற 'உங்களில் ஒருவன்' தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கேரள முதல்வர் கலந்து கொண்டு தமிழக முதல்வரை வாழ்த்திப் பேசியிருக்கிறார். திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் நல்ல தோழமை உணர்வுடன் இருக்கின்றன. இதுபோன்ற சூழலில் தமிழகத்திற்கு நல்லது செய்யவேண்டிய கேரள அரசு, தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் நோக்கில் தொடர்ந்து இடையூறுகளை விளைவித்துக் கொண்டிருக்கும் கேரள அரசை கண்டித்துப் பேச வேண்டிய தமிழக முதல்வர் மவுனம் சாதிக்கிறார். தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுகுறித்து எப்போதும் வாய் திறந்து பேசுவதில்லை. இதுபோன்ற நிலை நீடித்தால், சாதாரண பணிகளுக்குக்கூட நாம் கேரள அரசிடம் மன்றாடி, பணிந்து, அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற நிலைமை மாறி, தற்போது உரிமைக்கு மட்டும் கை கொடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
உறவு, தோழமை, நட்பு ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, உரிமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு நிச்சயம் உண்டு.
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பராமரிப்புப் பணிகளுக்குக்கூட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தமிழக அரசின் வாகனத்தை அங்கேயே நிற்க வைத்திருக்கும் கேரள அரசின் செயலை தட்டிக் கேட்பதோடு, இதனை கேரள முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற இடையூறுகளைத் தடுத்து நிறுத்தவும், எவ்வித தயக்கமுமின்றி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT