Published : 14 Mar 2022 05:30 AM
Last Updated : 14 Mar 2022 05:30 AM

கோடை சீசனுக்கு முன்னரே களைகட்டிய உதகை: சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

உதகை

வாரயிறுதி விடுமுறை நாட்களில்கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் திரண்டதால், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவுவாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.

கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான ரகங்களைச் சேர்ந்த 5,000 பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அதில் பூத்துக் குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இத்தாலியன் பூங்கா மேல்பகுதியிலுள்ள கண்ணாடி மாளிகையில் பல வகையான கள்ளி செடிகளை பார்வையிட்டதுடன், ரோஜா பூங்காவிலுள்ள பல வண்ண ரோஜா மலர்களையும் கண்டு ரசித்தனர். நேற்று முன்தினம் 11 ஆயரித்து676 பேர் பூங்காவுக்கு வந்த நிலையில், நேற்று மாலை வரை சுமார் 10 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

உதகை படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். கடந்த 1-ம் தேதி முதல் நேற்று வரை சுமார் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதேபோல, ஃபைன்ஃபாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. உதகை கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோடை சீசன் தொடங்குவதற்கு முன்பே சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது.

குறைய வாய்ப்பு

இதுதொடர்பாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, "கரோனா கட்டுப்பாடுகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை சீசன் காலத்தில் முழு முடக்கம் அமலில் இருந்தது. இந்தாண்டு கரோனா முழு முடக்கம் இருக்காது என எதிர்பார்க்கிறோம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மே மாதம் நடக்கின்றன. இதனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வழக்கம்போல அல்லாமல், இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் ரம்ஜான் நோன்பு தொடங்குவதால், மார்ச் மாதமே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கேரளா, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் அதிகமாக உள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x