Published : 14 Mar 2022 05:25 AM
Last Updated : 14 Mar 2022 05:25 AM
சாமளாபுரம் பகுதியில் அருந்ததியர் சமூக மக்களை அகற்றும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என விசிக தலைவரும், மக்களவைத்தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் கருப்பராயன் கோயில் வீதியில்150-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்குடும்பங்கள், கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதி ஏரி புறம்போக்கு எனக் கூறி, வீடுகளை காலி செய்யும், இடித்து அகற்றும் நடவடிக்கைக்காக சமீபத்தில் நீர்வளத் துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்டா வழங்கக் கோரியும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தொடர் போராட்டங்களில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘அருந்ததியர் மக்களை காலி செய்யுமாறு நீர்வளத்துறை நோட்டீஸ் வழங்கிய விவகாரத்தில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, இப்பகுதியில் வசிப்போருக்கு உடனடியாக நிலத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை முதல்வரின் கவனத்துக்கு நாங்கள் எடுத்துச் செல்வோம். பொதுமக்களை இங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT