Last Updated : 07 Apr, 2016 03:58 PM

 

Published : 07 Apr 2016 03:58 PM
Last Updated : 07 Apr 2016 03:58 PM

அதிமுக பட்டியல் மாற்றத்தால் வேலூர் அதிமுக வேட்பாளர்கள் கலக்கம்

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வேலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள 13 தொகுதிகளின் வேட்பாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. அதிமுக சார்பில் போட்டியிட உள்ள 227 வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 4-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் மீது சுமத்தப்பட்டு வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று மாலை வரை 4 முறை வேட்பாளர்கள் பட்டியல் திருத்தம் செய்து, மாற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அருப்புக்கோட்டை, தியாகராயநகர், நாகர்கோவில், மேட்டூர், காட்டுமன்னார்கோயில், வேதாரண்யம், மன்னார்குடி, பல்லாவரம், மதுரை வடக்கு, பூம்புகார் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் முன்பு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் நீக்கப்பட்டு, புதிய வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்து வருகிறது.

வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்த 2-வது நாளிலேயே 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மாற்றியமைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

வேலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள 13 வேட்பாளர்களில் சிலர் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ள ராமதாஸ், தொகுதிச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர், அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதாகவும், கட்சியின் விரோதப் போக்கில் செயல்பட்டு வரும் ராமதாஸ் அதிமுக சார்பில் போட்டியிடத் தகுதியற்றவர் என கட்சித் தலைமைக்கு அடுக்கடுக்கான புகார்கள் அனுப்பப்பட்டு வருவதாக மூத்த அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து, சோளிங் கர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.ஜி.பார்த்தீபன் முன்னாள் மாவட்டச்செயலாளராக பொறுப்பு வகித்தவர். சோளிங்கர் தொகுதியில் இவருக்கு எதிராக சிலர் கட்சித் தலைமைக்கு புகார் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படு கிறது.

அதேபோல், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன், அணைக்கட்டு தொகுதி வேட்பாளர் கலையரசு, ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் சுமைதாங்கி ஏழுமலை, ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பாலசுப்பிரமணியம், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டி.டி.குமார், வாணியம்பாடி தொகுதி வேட்பாளர் நீலோபர்கபீல் ஆகி யோர் மீதும் கட்சித் தலைமைக்கு அடுக்கடுக்கான புகார்கள் அனுப்பட்டு வருகிறது.

இதனால், வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் மாற்றியமைக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக உளவுத்துறையினர் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மே 2-ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். அன்று வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று 13 அதிமுக வேட்பாளர்களும் அச்சத்துடன் இருக்கிறார்கள். அன்றையதினம் மாலைதான் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியும் என்கிறார்கள் அதிமுகவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x