Published : 27 Jun 2014 03:38 PM
Last Updated : 27 Jun 2014 03:38 PM

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 11 சாலைகள் விரிவாக்கம்: சென்னை மாநகராட்சி தீர்மானம்

சென்னையில் ஆக்கிரமிப்புகளால் குறுகியுள்ள 11 சாலைகளை அகலப் படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இதனால் வடசென்னை மற்றும் மத்திய சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பிரச்சினைக்கு பெரியளவில் தீர்வு ஏற்படும்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் சைதை துரைசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேப்பர் மில்ஸ் சாலை

வட சென்னை பகுதியில் போக்கு வரத்து நெரிசல் அதிகமுள்ள 3 சாலைகள் உட்பட சென்னையில் 11 சாலைகளை விரிவாக்கம் செய்ய மன்றக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது சுமார் 15 மீட்டர் அகலம் கொண்ட பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம்-ரெட்ஹில்ஸ் சாலையை 18 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியி ருப்புகள், வாகனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகரித் திருப்பதாலும், தனியார் கடைகளின் ஆக்கிரமிப்புகளாலும் குறுகிவிட்ட இந்த சாலையை விரிவாக்க வேண்டும் என்று பொது மக்கள் பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்வது மாநகராட்சியின் பொறுப்பு என்று 2012-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

அதே போல், 12 மீட்டர் அகலம் கொண்ட புரசைவாக்கத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையை 24 மீட்டர் அகலத்துக்கும், சுமார் 17 மீட்டர் அகலமுள்ள ஓட்டேரி ஸ்ட்ரா ஹான்ஸ் சாலையை 24 மீட்டர் அகலத்துக்கும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எழும்பூர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கத்திலிருந்து, புளியந் தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர், பாரதி நகர், மாதவரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வழித்தடங் களில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

கோடம்பாக்கம் சாலை

இது தவிர நெல்சன் மாணிக்கம் சாலையை 24 மீட்டர் அகலமாகவும், காளியம்மன் கோயில் தெருவை 1140 மீட்டர் நீளத்துக்கு 27 மீட்டர் அகலமாகவும், 1950 மீட்டர் நீளத்துக்கு 24 மீட்டராகவும், சாந்தோம் நெடுஞ்சாலையை (காரணீஸ்வரர் பகோடா சாலை முதல் டி.ஜி.எஸ். தினகரன் சாலை வரை) 24 மீட்டராகவும், சர்தார் பட்டேல் சாலை (அண்ணா சாலை முதல் மத்திய கைலாஷ் வரை) அடையார் எல்.பி.சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையை (சர்தார் பட்டேல் சாலை முதல் பழைய மகாபலிபுரம் சாலை வரை) மற்றும் என்.எஸ்.கே.சாலையை 30.50 மீட்டராகவும், மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள கோடம்பாக்கம் சாலை, ஜெயராமன் தெரு மற்றும் மசூதி தெருவை 18 மீட்டராகவும் அகலப்படுத்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சாலைகளை அகலப்படுத்த தேவையான நிலத்தை கையகப்படுத்தும் அனுமதி மாவட்ட ஆட்சியர் மூலம் பெறப்படும்.

கிண்டி ரேஸ் கோர்ஸ்

மேலும், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையை விரிவாக்கம் செய்ய மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடமிருந்து 10 கிரவுண்ட் நிலத்தை மாநகராட்சிக்கு கொடுக்க ரேஸ் கிளப் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், ரேஸ் கிளப்பில் தற்போது உள்ள சுற்று சுவர், நுழைவாயில், வாகன நிறுத்தம் ஆகியவை மாநகராட்சி வசம் வந்துவிடும். இதற்குரிய இழப்பீட்டை மாநகராட்சி ரேஸ் கிளப்பிற்கு அளிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x