Last Updated : 13 Mar, 2022 03:40 PM

6  

Published : 13 Mar 2022 03:40 PM
Last Updated : 13 Mar 2022 03:40 PM

எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது: தொல்.திருமாவளவன் 

விசிக தலைவர் திருமாவளவன் | கோப்புப் படம்

கோவை: எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கோவை விமானநிலையத்தில் இன்று (மார்ச் 13) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கம்போல் ஒன்றுசேராமல் தனித்தனியே போட்டியிட்டதன் விளைவாகவும், மத வெறுப்பு அரசியலை தொடர்ந்து பரப்பி வருவதாலும் பாஜக உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து அவர்கள் பேசவில்லை. மாறாக ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம் எழுப்புவது, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பது என்று மக்களின் மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இது மிகவும் ஆபத்தான அரசியல்.

இந்தியாவை சூழ்ந்திருக்கும் இந்த ஆபத்தை எதிர்கொள்ளவும், விரட்டி அடிக்கவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரள முன்வர வேண்டும். எந்த கட்சி தலைமையேற்பது, யார் பிரதமர் என்பதைவிட அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற அவசியம் இருப்பதை எதிர்கட்சிகள் உணர வேண்டும். 4 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன.

எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. அதை தடுத்தாக வேண்டும். ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசே கூட சட்டம் இயற்றிக்கொள்ள முடியும். மேலும், சாதி, மத மோதல்களை தடுப்பதற்கென உளவுத்துறை ஒன்றை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x