Published : 13 Mar 2022 06:34 AM
Last Updated : 13 Mar 2022 06:34 AM
சாதி, மத வக்கிரம் பிடித்தவர்கள் சமூகவலைதளம் போன்ற நவீன தொழில்நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தி, சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கின்றனர். இவர்களை முளையிலேயே களையெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பதிவுகளை பதிவிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது.முதல்வர் ஸ்டாலின் தனது நிறைவுரையில் கூறியதாவது:
நாம் அனைவரும் சேர்ந்ததுதான் அரசு.கடைக்கோடி மனிதரின் கவலையையும் தீர்ப்பதே நல்ல அரசு. அப்படித்தான் இந்த அரசு அமைந்திருக்கிறது.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கட்டுப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றங்களின் சதவீதத்தை குறைப்பது அல்ல; குற்றங்களே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
சமூக ஒழுங்கு பிரச்சினை
சாதி மோதல்கள் என்பது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, அது சமூக ஒழுங்குப் பிரச்சினை. படிக்காத இளைஞர்களால் மட்டுமின்றி, படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் ஒரு சிலராலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்ற இளைஞர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.விளையாட்டு போட்டிகள், ஊர்க்காவல்படைகள் என ஆக்கப்பூர்வமான வழிகளில் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதாக நெல்லை எஸ்.பி.கூறினார். அதுபோல மற்ற மாவட்டங்களும் செயல்பட வேண்டும். மத மோதல்கள் குறித்து கோவையில் இயங்குவதுபோல அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவு அமைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ள ஆலோசனை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
ஒரு காலத்தில் மதம் என்பது, மதம்சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்தது.இப்போது அது அரசியல் நோக்கம் உள்ளதாக சிலரால் மாற்றப்பட்டுவிட்டது. எனவே, அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை தடுக்க வேண்டு்ம்.
சாதி மோதல்களுக்கும், மதப் பிரச்சினைகளுக்கும் சமூக வலை்தளங்கள் முக்கிய காரணமாக இருப்பது உண்மைதான். இது நவீன தொழில்நுட்ப யுகம். இத்தொழில்நுட்பத்தை நல்லதுக்கும், அழிவுக்கும் பயன்படுத்தலாம். சாதி, மத வக்கிரம் பிடித்தவர்கள் இதை அழிவுக்குப் பயன்படுத்தி, சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கின்றனர். இவர்களை முளையிலேயே நாம் களையெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பதிவுகளை பதிவிடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலமாக நடைபெறும் இந்த வன்மங்களுக்கு எல்லா வகையிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காக தனியாக ஓர் ஆலோசனை கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சமூக வலைதள குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு புதிய அலுவலகம் அமைக்கப்படும்.
சிறைக் கைதிகளை காணொலி மூலம் ஆஜர்படுத்தும்போது நேரம், செலவு மிச்சமாகிறது என்பதால் அதை செயல்படுத்தலாம்.
போக்சோ வழக்குகளில் உரிய நீதி கிடைக்கச் செய்வது காவல்துறை அதிகாரிகளின் தலையாக கடமையாகும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர், வெளி மாநிலத் தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பை வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத்துறை ஆகியன இணைந்து தயாரிக்க வேண்டும்.
ரவுடிகளை சாதி, மதம் என்று அடையாளப்படுத்தக்கூடாது.
சாலை விபத்துகள் குறைக்கப்பட வேண்டும். உயிரிழப்புகள் தவிர்க்கப்படவேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பட்டாசு, தீ விபத்துகளைத் தடுப்பதிலும் அதன் பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். வனப்பரப்பை 33 சதவீதமாக்க உரிய நிதி ஒதுக்கப்படும். காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது வனத்துறை வீரர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
வன விலங்குகள் சிகிச்சைக்காக கால்நடை பராமரிப்புத் துறையில் தனி அலகு ஏற்படுத்தி பயிற்சிகள் அளிக்கப்படும்.
கரோனா காலத்தில் பெற்றோரை இழந்தவர்களுக்கு தாமதம் இல்லாமல் இழப்பீடு வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகளில் பகுதி சபை,வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் களையப்படும்.
ஆடு, கோழிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் விற்க உழவர் சந்தை போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
உங்கள் தொகுதியில் முதல்வர், மக்களைத் தேடி மருத்துவம், வேளாண் பட்ஜெட், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் போன்ற திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். இந்த மாநாட்டில் தலைமைச் செயலர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசுத் துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT