Published : 13 Mar 2022 04:15 AM
Last Updated : 13 Mar 2022 04:15 AM
திருச்சி பாலக்கரை பகுதியில் விற்பனை செய்வதற்காக கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 500 பச்சைக் கிளிகள் மற்றும் 300 முனியாஸ் குருவிகளை வன பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
திருச்சி பாலக்கரை குருவிக்காரன் தெருவிலுள்ள சில வீடுகளில் பச்சைக் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வன பாதுகாப்புபடையின் உதவி வன பாதுகாவலர் நாகையா தலைமையிலான குழுவினர் நேற்று அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் முன்பகுதியில் கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகள் விற்பனைக்காக கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வன பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
இதுகுறித்து வன பாதுகாப்புபடை அதிகாரிகள் கூறும்போது,‘‘குருவிக்காரன் தெருவிலுள்ள வீடுகளில் இருந்து சுமார் 500 கிளிகள், 300-க்கும் மேற்பட்ட முனியாஸ் குருவிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான கிளிகளின் இறக்கைகள் வெட்டப்பட்டிருந்ததால் அவற்றால் உடனடியாக பறக்க முடியவில்லை. எனவே, இன்னும் சில நாட்களுக்கு அவற்றுக்கு உணவளித்து, அதன்பின் பறக்கவிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. முனியாஸ் பறவைகள், கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு பறக்கவிடப்படும். அவற்றை அடைத்து வைத்திருந்த நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT