Published : 18 Apr 2016 05:00 PM
Last Updated : 18 Apr 2016 05:00 PM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுகிறார். மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே வைகோ இம்முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டது.
தொண்டர்கள் குழப்பம்
சமீபத்தில் கோவில்பட்டியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய, தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ், தங்கள் கூட்டணி வென்றால் விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர் என அறிவித்தார்.
இதற்கு வைகோ மறுநாளே மறுப்பு தெரிவித்தார். தனக்கு எந்த பதவி மீதும் விருப்பம் கிடையாது என, அவர் விளக்கம் அளித்திருந்தார். இதனால் வைகோ தேர்தலில் போட்டியிடுவாரா, இல்லையா என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது.
கட்சி நிர்வாகிகளிடமும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே கடைசி வரை கூறி வந்தார்.
இருப்பினும் அவரது நடவடிக்கைகள் கோவில்பட்டி தொகுதியையே சுற்றி வந்ததால், இந்த தொகுதியில் அவர் போட்டியிடலாம் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அதை மெய்ப்பிக்கும் வகையில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு பின்
வைகோ சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட அதிக நாட்டம் காட்டுவதில்லை. மக்களவைத் தேர்தலில் தான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். கடந்த 1994-ம் ஆண்டு மதிமுகவை தொடங்கிய பிறகு 1996-ல் நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மதிமுக தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் வைகோ முதல் முறையாக சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, திமுகவின் கே. ரவிசங்கரிடம் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதன்பின் சட்டப்பேரவை தேர்தல்களில் வைகோ போட்டியிடவே இல்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டியிடுகிறார்.
கோவில்பட்டி ஏன்?
வைகோ கோவில்பட்டி தொகுதியை தேர்வு செய்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. தனது சொந்த ஊரான கலிங்கப் பட்டிக்கு அருகே இருப்பதால் கோவில்பட்டி தொகுதி மக்களுக்கு வைகோ நன்கு அறிமுகமானவர். எப்படியும் மாதத்தில் இருமுறை அவர் கோவில்பட்டிக்கு ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்துவிடுவார். எனவே, மக்களிடம் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்து வருகிறார். மேலும், வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாய வாக்குகள் இத்தொகுதியில் அதிகம். அவரது உறவினர்கள் அதிகம் பேர் இத்தொகுதியில் உள்ளனர். மதிமுகவுக்கு என கணிசமான வாக்கு வங்கி இருப்பதும் அவர் கோவில்பட்டியை தேர்வு செய்வதற்கு ஒரு காரணம்.
1996 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் 31,828 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுக்கும் இங்கு குறிப்பிட்ட சதவீத வாக்கு உள்ளது.
கோவில்பட்டி தொகுதி 2008-க்கு முன்பு வரை சிவகாசி மக்களவைத் தொகுதிக்குள் தான் இருந்தது. வைகோ சிவகாசி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது கோவில்பட்டியில் பல திட்டங்களை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் தனக்கு கைகொடுக்கும் என அவர் உறுதியாக நம்புவதால் தான் இம்முறை கோவில்பட்டி தொகுதியை தேர்வு செய்ததாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
பெரும் சவால்
ஆனால், இந்த முறை பலமுனை போட்டி இருப்பதால் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி என்பது சவாலாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராமானுஜம் கணேஷ் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். அவருக்கும் தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. மேலும், ஆளும் கட்சி என்ற பலமும் உள்ளது.
இதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியன் இந்த தொகுதியின் மற்றொரு மெஜாரிட்டி சமுதாயமான தேவர் இனத்தை சேர்ந்தவர். இவருக்கும் தொகுதியில் நல்ல மதிப்பு இருக்கிறது. இவர்கள் இருவருமே வைகோவுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாய வாக்குகள் இத்தொகுதியில் அதிகம். மதிமுகவுக்கு என கணிசமான வாக்கு வங்கி இருப்பதும் கோவில்பட்டியை தேர்வு செய்வதற்கு ஒரு காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT