Last Updated : 13 Mar, 2022 05:10 AM

 

Published : 13 Mar 2022 05:10 AM
Last Updated : 13 Mar 2022 05:10 AM

தமிழக அரசு, காவல் துறை செயல்பாடுகள் தொடர்பான மக்களின் மனநிலையை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்: உளவுப் பிரிவு போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை

தமிழக அரசு, காவல் துறையின் செயல்பாட்டின் பொதுமக்களின் மனநிலையை அறிந்து, அதுகுறித்த தகவல்களை உயரதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும் என்று உளவுப் பிரிவுபோலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல் துறையின் முக்கியப் பிரிவான உளவுப் பிரிவு போலீஸார், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, அரசியல் மாநாடு, பிரபலங்களின் சந்திப்பு உள்ளிட்டவை தொடர்பாக சாதாரண உடையில் சென்று, ஆழமான் தகவல்களை சேகரிப்பார்கள். அவர்கள், தங்களை காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், ரவுடிகள், சமூக விரோதிகளின் நடமாட்டம், பிற நாட்டினரின் சட்ட விரோத ஊடுருவல் உள்ளிட்ட தகவல்களையும் ரகசியமாக சேகரித்து, தங்களது உயரதிகாரிக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் சட்டம் - ஒழுங்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வர். இதன் மூலம் குற்றச் செயல்கள் நடைபெறும் முன்னரே, தடுத்து நிறுத்தப்படும்.

இந்நிலையில், அண்மைக்காலமாக உளவுப் பிரிவு போலீஸார் புலனாய்வுப் பணியில் சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, நிகழ்ச்சி அல்லதுகுற்றச் சம்பவம் நடைபெற்ற பின்னரே, அதுகுறித்த தகவல்களை உயரதிகாரிகளுக்கு அளிப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நடந்து முடிந்த நிகழ்வுகள், சம்பவங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதைக் குறைத்துக் கொண்டு, அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்னரே அது தொடர்பான தகவல்களை திரட்ட முயற்சி செய்யுமாறு உளவுப் பிரிவு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் திட்டங்கள், காவல் துறையின் செயல்பாடுகள் காரணமாக, பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மனநிலை மற்றும் மகிழ்ச்சி, விரக்தி, ஏமாற்றம், எதிர்பார்ப்பு உள்ளிட்ட தகவல்களைத் திரட்டி, உளவுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஜாதி மோதல்கள், இரு தரப்பினரியிலான பிரச்சினைகள், ரவுடிகளின் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை நிகழாதபடி, முன்னரே தகவல்களைத் திரட்டுமாறும் உளவுப் பிரிவு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணி மதிப்பீடு

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் திறமையான, துடிப்பான காவல் கண்காணிப்பாளர்களை, மாவட்டங்களில் நியமிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, அனைத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் பணிகளும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், எதிர்பார்த்த அளவுக்கு பணியை மேற்கொள்ளாதவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானர்கள் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் துடிப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மனநிலை மற்றும் மகிழ்ச்சி, விரக்தி, ஏமாற்றம், எதிர்பார்ப்பு உள்ளிட்ட தகவல்களைத் திரட்டி, உளவுப் பிரிவு உயர் அதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x