Published : 13 Mar 2022 04:10 AM
Last Updated : 13 Mar 2022 04:10 AM

மதுரையில் திமுகவினர் போட்டி போட்டு போஸ்டர் யுத்தம்: உள் கட்சி நிர்வாகிகளையே விமர்சிப்பதாக சர்ச்சை

மதுரை

மதுரையில் திமுகவினர் பல்வேறு விமர்சனங்களுடன் ஏராளமான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இது மறைமுகமாக உட்கட்சியினரையே குறிப்பிடுவதாக எழுந்துள்ள விமர்சனம் நிர்வாகிகளை மனவருத்தமடைய செய்துள்ளது.

மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக யாரை கொண்டுவருவது என்பதில் 2 அமைச்சர்கள், 3 மாவட்ட செயலாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவுடன் இந்திராணி மேயரானார். இதனால் முன்னாள் அமைச்சரான பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகளுக்கு மேயர் சீட்டை பெற விடாமல் செய்ததில் திமுகவினர் சிலருக்கு மகிழ்ச்சி. அமைச்சர் பி.மூர்த்தி சிபாரிசு செய்தவருக்கு மேயர் வாய்ப்பு கிடைக்காதது வேறு சிலருக்கு மகிழ்ச்சி என மதுரையில் திமுகவினரிடையே பிரிவு, பிரிவாக மகிழ்ச்சியும், வருத்தமும் தொற்றிக்கொண்டது. இதன் தாக்கம் மேயர் பதவி ஏற்பின்போதே அப்பட்டமாக வெளிப்பட்டது. ஒரு அமைச்சர், 3 மாவட்ட செயலாளர்கள், பல திமுக கவுன்சிலர்கள் விழாவில் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே மனக்கசப்பு அதிகரித்துள்ள நிலையில், “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழிகாட்டுதல்படி மட்டுமே செயல்படுவேன்” என மேயர் வெளியிட்ட அறிவிப்பு திமுக நிர்வாகிகளை மேலும் கடுப்பாக்கியது.

இந்நிலையில் திமுகவில் சிலர் ஏராளமான போஸ்டர்களை மாநகர் முழுக்க தினந்தோறும் ஒட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக ‘துரோகத்தை வென்று கழகத்தை காத்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியரே’ என்றும், மதுரை காப்பாற்றப்பட்டது (Madurai saved) என்றும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். மேயரின் கணவர் பொன்வசந்த் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் “நம்ம கூட இருக்குறவங்கள (தொண்டர்களை) நாம பாத்துக்கிட்டா, நமக்கு மேல இருக்குறவங்க (கட்சி தலைமை) நம்மள பாத்துப்பாங்க” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், எம்.மணிமாறன் ஆகியோர் படங்கள் இடம்பெறாமல் சில போஸ்டர்கள் உள்ளன. அனைத்து போஸ்டர்களிலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுகவினர் கூறியது: திமுகவினர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் உள்ளது. மதுரையை மீட்டது, மதுரையை காப்பாற்றியது போன்ற வாசகங்கள் மேயர் பதவி வேறு யாருக்காவது கிடைக்காமல் தடுக்கப்பட்டதை மறைமுகமாக குறிப்பதுபோல் உள்ளது.

மேயர் வேட்பாளர் தேர்வுக்கு பின்னணியில் நடக்கும் இந்த போஸ்டர் யுத்தம் திமுகவினரை குறிவைத்தே, ஒரு அமைச்சருக்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே நடக்கிறது என்பது தெளிவாகிறது. இது நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தி, மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலை மேலும் தொடர்ந்தால் அது மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாக எதிரொலிக்கும், என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x