Published : 13 Mar 2022 04:00 AM
Last Updated : 13 Mar 2022 04:00 AM

தமுக்கம் மைதானத்தில் நடக்கும் பொருட்காட்சியை மாட்டுத்தாவணிக்கு மாற்றக்கூடாது: செல்லூர் கே.ராஜூ

மதுரை

அரசு சித்திரைப் பொருட்சியை மாட்டுத்தாவணிக்கு மாற்றக்கூடாது என்றும், தமுக்கம் மைதானத்தில் போதுமான இடம் உள்ளதால் அங்கேயே நடத்த வேண்டும் என்றும் அதிமுக மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை சித்திரைத் திருவிழாவில் அரசு துறை சார்பில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் முக்கிய திட்டங்களை விளக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சித்திரைப்பொருட்காட்சி தமுக்கம் மைதானத்தில் நடைபெறும்.

திருக்கல்யாணம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியவற்றை காணவரும் பக்தர்கள், இந்த பொருட்காட்சியை காண்பதற்காகவும், மதுரைக்கு இந்த திருவிழா நாட்களில் வரும் தென் மாவட்ட மக்கள் பொழுதுபோக்கும் வகை யிலும் சித்திரைத் திருவிழா நடைபெறுவதற்கு அருகில் உள்ள தமுக்கம் மைதானத்தில் ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த பொருட் காட்சி தமுக்கம் மைதானத்தில் 40 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. கரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப் படவில்லை.

தற்போது தமுக்கம் மைதானத் தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை கொடிசியா போல் ஒரு அரங்கம் கட்டுமானப் பணி நடக்கிறது. இந்தப் பணியை சுட்டிக்காட்டி, தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் அரசு பொருட்காட்சியை மாட்டுத்தாவணி அருகில் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது.

தற்போது தேர்வு செய்யப் பட்டுள்ள இடம் வெளியூர் செல்லும் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், காய்கறி வணிக வளாகம், பூ மார்க்கெட், பழ மார்க்கெட் ஆகியவற்றால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம் என்பதால் மக்கள் பொருட்காட்சியை காண வர வாய்ப்பில்லை.

தமுக்கம் மைதானத்தில் அரங்கம் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தை தவிர பொருட்காட்சி நடத்துவதற்கு போதுமான இடம் உள்ளது.

எனவே தொடர்ந்து தமுக்கம் மைதானத்திலேயே பொருட்காட்சி நடத்த அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x