Published : 12 Mar 2022 01:04 PM
Last Updated : 12 Mar 2022 01:04 PM
சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் சாதி,மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் மூன்றாவது நாளாக இந்த மாநாடு நடைபெறுகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மோதல்களை சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் காவல்துறையினர் பார்க்க வேண்டாம். அது சமூக ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்க வேண்டும்.
கிராமங்களில் படிக்காத இளைஞர்களால் மட்டுமல்லாது, படித்துவிட்டு வேலையில்லா இளைஞர்களாலும் இம்மாதிரியான சாதி மோதல் பிரச்சினை உருவாகிறது. மத மோதல்களை தடுப்பதற்கான பிரிவு கோவை மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களில் ஏற்படுத்த ஆலோசிக்கப்படும்.
சமூக மோதல்களை தடுக்க அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து காவல்துறையினர் பணியாற்ற வேண்டும். குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதைவிட குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
என்எஸ்எஸ், என்சிசி மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடலாம்.
தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பி விடக்கூடாது. தடை செய்யப்பட்ட இயக்கங்களை நமது மாநிலத்தில் நுழைய விடாமல் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT