Published : 12 Mar 2022 12:11 PM
Last Updated : 12 Mar 2022 12:11 PM

உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள்: விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

மாணவர்களை வரவேற்ற தமிழக முதல்வர்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “24.02.2022 அன்று ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில உக்ரைனுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் சிக்கிய தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களை மீட்பதற்காக துரித நடவடிக்கையினை உடன் மேற்கொண்டார். மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ் மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள 24.02.2022 அன்றே கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து, மாநில அளவில் 24.02.2022 அன்றே கட்டுப்பாட்டு அறை உருவாக்க அரசுச் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அவர்களுக்கு ஆணையிட்டார்கள.

மேலும், பொறுப்பு அலுவலராக ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அவர்களை நியமனம் செய்ததுடன், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு அலுவலர்களாகவும், புதுடெல்லியில் கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மை உள்ளுறை ஆணையர் மற்றும் உள்ளுறை ஆணையர் ஆகியோரையும் பொறுப்பு அலுவலர்களாக நியமித்து ஆணை வழங்கப்பட்டது.

சென்னையில் 24X7 மணி நேரம் இயங்கக்கூடிய அவசரக் கட்டுப்பாட்டு அறையும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும், 9940256444, 9600023645 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது. மேலும் nrtchennai@gmail.com, nrtamils@tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளும் அறிவிக்கப்பட்டு அதன்வாயிலாக, உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

26.02.2022 அன்று முதல்வர் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று காணொலி அழைப்பு வாயிலாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் 3 மாணவர்களுடன் தொடர்புகொண்டு உரையாடி அவர்களுக்கு தைரியத்தையும் அறிவுரைகளையும் அளித்தார்.

மேலும், 1921 நபர்கள் 3501 தொலைபேசி அழைப்புகள் மூலமும், 4426 மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உக்ரைன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் பெற்றோர்/உறவினர்கள் மூலமாக அவர்கள் விவரம் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க ஒன்றிய வெளியுறவு துறையிடம் பகிரப்பட்டது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தமிழ் மாணவர்களின் மீட்பு நடவடிக்கை தாமதமான காரணத்தினால் மீண்டும் முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 28.02.2022 அன்று தொலைபேசி வாயிலாகவும், பின்னர் 03.03.2022 அன்று கடிதம் மூலமாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழியுறுத்தினார்.

மேலும்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் .திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, நான்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் திரு. அஜய்யாதவ், எம்.கோவிந்தராவ், எம்.பிரதீப்குமார் மற்றும் எ.கே.கமல்கிஷோர் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று தமிழ் மாணவர்களை மீட்கும் பணி செய்ய அனுமதி கோரப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இக்குழுவானது ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்ரமணியனை 05.03.2022 அன்று டெல்லியில் சந்தித்து உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்களை மீட்கும் பணியினை விரைவுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன் தமிழ் மாணவர்கள் அங்கு சந்திக்கும் இடர்பாடுகள் தொடர்பாகவும் விளக்கி கூறப்பட்டது.

மேலும் உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவோகியா போன்ற நாடுகளின் வழியாக தமிழ் மாணவர்களை மீட்பது தொடர்பாகவும் மிகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சரும் தமிழ் மாணவர்கள் மீட்கும் பணியினை விரைவுப்படுத்துவதாகவும் உறுதி அளித்தார்.

35 மாணவர்கள் உக்ரைன் நாட்டின் சில பகுதிகளிலிருந்து அருகாமையிலுள்ள ஹங்கேரி நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட செலவு மற்றும் சுமார் 160 மாணவர்களுக்கு உக்ரைன்-ரூமேனியா நாட்டின் எல்லைக்கு செல்வதற்கும் அங்கிருந்து ருமேனியா நாட்டின் தலைநகரமான புகாரெஸ்டிற்கு செல்வதற்கான செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.

உயர்மட்டக்குழு அமைத்த பின்னர் தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியின் காரணமாக தமிழக மாணவர்கள் மீட்கும் பணி மேலும் வேகமெடுத்ததுடன் தமிழ் மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலும் அழைத்துவரப்பட்டனர். தமிழக மாணவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டதுடன், தமிழகம் அழைத்துவரப்பட்டதும் துரிதப்படுத்தப்பட்டது. பிரத்யேகமாக மூன்று சிறப்பு விமானங்களும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தமிழ்நாடு அரசால் ரூ.3.50 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது.

7.03.2022 அன்று முதல்வர் மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம், ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவப் பட்டப் படிப்பு படித்து வரும் செல்வி நிவேதிதா, செல்வி திவ்யபாரதி, செல்வி ஹரிணி, திரு. நவநீத ஶ்ரீராம் ஆகியோர்களை அவர்களது வீட்டில் சந்தித்தபோது தங்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக மீட்டு, தாயகம் திரும்பிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு அரசிற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது மாணவ, மாணவியர்கள் தங்கள் படிப்பை தொடர்வதற்கு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 1524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் தமிழகம் அழைத்து வரப்பட்டு, அவர்கள் இல்லம் செல்லும் வரை கொண்டு சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 366 மாணவர்கள் அவர்களது சொந்த செலவில் தமிழகம் திரும்பியுள்ளனர். இது தவிர 31 மாணவர்கள் உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறிவிட்டனர். இவர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x