Published : 12 Mar 2022 07:20 AM
Last Updated : 12 Mar 2022 07:20 AM

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்: திருச்சியில் 2 வாரம் தங்கியிருக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைதானமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள மீன் வலை தொழிற்சாலை நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

2016-ம் ஆண்டில் நிலம் அபகரிப்பு

இந்நிலையில், ஜெயக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலமாக அந்தநிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகவும் கூறி மகேஷ்குமார்புகார் அளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர்ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமாரை, மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, ஏ.நடராஜன் ஆகியோர் ஆஜராகி, ‘‘மனுதாரர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே மீன் வலை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குக்கும், ஜெயக்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்குடன் ஜெயக்குமார் மீது தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என வாதிட்டனர்.

வீடியோ ஆதாரங்கள்

புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், ‘‘ஜெயக்குமார் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி மருமகனுக்கு ஆதரவாக செயல்பட்டு நிலத்தை அபகரித்துக் கொண்டார். அடியாட்கள் மூலமாக புகார்தாரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ ஆதாரங்கள் ஏற்கெனவே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’’ என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் கோகுல், ‘‘இந்த வழக்கின் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருந்து வருகிறது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள் உள்ளது. விசாரணை முழுமையடையவில்லை என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’’ என எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ‘‘மனுதாரரான ஜெயக்குமார் 2 வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள்கிழமைதோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, சென்னை மாநகராட்சி தேர்தலின்போது திமுகவைச்சேர்ந்த நரேஷ்குமார் என்பவரைதாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும், தொண்டர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் முன்னாள்அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் மீதான3-வது வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x