Published : 28 Apr 2016 02:10 PM
Last Updated : 28 Apr 2016 02:10 PM
உள்ளூர் பிரச்சினைகளை காரணம் காட்டி தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்புகள் ஆங்காங்கே ஒருசில இடங்களில் வெளியிடப்பட்டிருப்பது அதிகாரிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்றும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. மனித சங்கிலி, பேரணி, ஊர் ஊராக பிரச்சாரம், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், ஸ்கேட்டிங், இருசக்கர வாகன பேரணி, கையெழுத்து இயக்கம், கல்லூரிகளில் சிறப்பு நிகழ்வுகள் என்றெல்லாம் வெவ்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அதிகாரிகளும், அலுவலர்களும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இச் சூழ்நிலையில்தான் ஆங்காங்கே தேர்தல் புறக்கணிப்பு குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
கண்டிகைப்பேரி கண்மாய்
சங்கரன்கோவில் அருகேயுள்ள கண்டிகைப்பேரி கிராமத்திலுள்ள கண்மாய் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த கண்மாய் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வலியுறுத்தி கண்டிகைபேரி கிராம மக்கள் கடந்த சில வாரங்களுக்குமுன் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து அறிவித்தனர். அதற்குரிய அடையாளமாக வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். தேர்தல் புறக்கணிப்புக்கான காரணத்தை விளக்கும் பிளக்ஸ் போர்டையும் வைத்தனர்.
தென்மலை
வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் தென்மலை பகுதியில் முறியபாஞ்சான் அணையிலிருந்து பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்களும் விவசாயிகளும் முடிவு செய்து கருப்பு கொடி கட்டினர். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இனையம் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புடன் கருப்பு கொடி கட்டப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியானது.
இவ்வாறு தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் வெளியானதும் அந்தந்த பகுதி தாசில்தார்களும், போலீஸாரும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசி வருகிறார்கள். எப்படியாவது சமாதானம் செய்து வாக்களிக்க வைக்க வேண்டிய கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்படுகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை மக்களிடம் எடுத்துக்கூறி, தீர்க்ககூடிய பிரச்சினைகளை தேர்தல் முடிந்தபின் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கிறோம். சில நேரங்களில் எழுத்துபூர்வமாக கூட வாக்குறுதியை மக்களுக்கு அளிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
சட்டபூர்வமாக தீர்க்க முடியாத பிரச்சினை என்றால் நிலைமையை எடுத்துக்கூறி, அதற்கு மாற்றுவழியையும் சொல்கிறோம். ஏதாவது ஒரு பகுதியில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்தால்கூட முன்கூட்டியே அங்கே சென்று மக்களிடம் பேசி சமரசம் செய்துவருகிறோம் என்று தெரிவித்தனர்.
தீர்வாகுமா?
இவ்வாறு தேர்தல் புறக்கணிப்பு செய்வது மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்குமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள். மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து தேர்தலை நடத்தும் நிலையில் சிறு பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணிப்பது அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கிவிடுகிறது. தேர்தலை காரணம் காட்டியாவது தங்கள் பகுதிகளில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதா என்ற எதிர்பார்ப்பில் இத்தகைய புறக்கணிப்பு அறிவிப்புகள் வெளியாகின்றன. ஆனால் புறக்கணிப்பால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை.
மாற்று வழி
தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க பிடிக்கவில்லை என்றால்கூட அதற்காக நோட்டா பட்டனை வாக்குப்பதிவு இயந்திரத்தில் அழுத்தி தங்கள் எதிர்ப்பை மக்கள் பதிவு செய்யவும் வழியுள்ளது. அவ்வாறு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தால்கூட தேர்தலுக்குப்பின் அதற்கான காரணத்தை குறித்து அதிகாரிகள் கவனமுடன் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்து அவர் மூலமும் தேர்தலுக்குப்பின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT