Published : 11 Mar 2022 08:55 PM
Last Updated : 11 Mar 2022 08:55 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறையும் இடைக்கால பட்ஜெட்டுக்காக அம்மாநில சட்டப்பேரவை இம்மாத இறுதியில் கூடுகிறது.
புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலை மாறி, மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதிலும், கடந்த கால புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டன. உரிய நேரத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டமன்ற கூட்டமே தள்ளிவைக்கப்பட்ட சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று புதுச்சேரியில் ஆட்சி அமைந்ததால் இம்முறை புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் இடைக்கால பட்ஜெட்டைதான் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளார்.
அடுத்த மாதம் ஊதியம் ஒப்புதல் தருவது, நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இம்மாத இறுதியில் சட்டப்பேரவை கூடவுள்ளது.
இது பற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மத்திய அரசு கடந்த நிதி ஆண்டைப் போலவே வரும் நிதி ஆண்டும் (2022-2023) ரூ.1729 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால், கூடுதலாக ரூ.2,000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பட்ஜெட் மதிப்பீடு செய்யும் பணியை முதல்வர் தலைமையில் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்கு, மார்ச் மாதம் இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT