Published : 11 Mar 2022 01:47 PM
Last Updated : 11 Mar 2022 01:47 PM
சென்னை: நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழக மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 15ம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சனையான காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. காவிரியின் குறுக்கே ரூ. 1,000 கோடி செலவில் புதிதாக மேகதாது அணை ஒன்றை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசு, அத்திட்டத்திற்கான செயல்பாடுகள் இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
அந்த அணை கட்டப்பட்டுவிட்டால், தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் சிறிதளவு தண்ணீர் கூடக் கிடைக்காது என்பதால், மேகதாது அணைத் திட்டத்திற்குத் தமிழக அரசு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீர் உரிய அளவில், உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. அதற்கான எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாத மத்திய அரசு, கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு துணை போவது வேதனையளிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பாலைவனமாகும். காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும்.
தமிழகத்திற்கு தரவேண்டிய நீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசு இப்போது வந்து கொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை மத்திய அரசின் மறைமுகத் துணையோடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.காவிரி நதி மீதான எந்தவிதமானக் கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும். ஆனால், தற்போது மத்திய அரசு கொடுத்துள்ளதாகக் கூறப்படும் ஒப்புதல் உச்சநீதிமன்றத்
தீர்ப்புக்கு எதிரானது.
எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழக மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக வரும் 15 ஆம் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழர்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்படும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், விவசாய அமைப்புகளும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT