Published : 11 Mar 2022 12:39 PM
Last Updated : 11 Mar 2022 12:39 PM
சென்னை: காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாத பட்சத்தில் அதற்கு மாற்றாக ஆம் ஆத்மி வெற்றி ஆறுதல் தருகிறது என்று தமிழருவி மணியனை தலைவராகக் கொண்டு செயல்படும் காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பஞ்சாப் தவிர மீதமுள்ள மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள சூழலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது; கோவாவிலும், உத்தரகாண்டிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் வலுவான போட்டியைத் தரும் என்ற நம்பிக்கை சிதைந்து போயிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட முறை 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதை' தான்.
'காங்கிரஸ் தலைமைக் குடும்ப வாரிசுகளின் முதிர்ச்சியற்ற அணுகுமுறை' என்று முன்னாள் தளபதி அமரீந்தர் சிங் குறிப்பிட்டிருந்ததை நிரூபித்துக் காட்டியிருக்கிறது பஞ்சாப் முடிவுகள். ஆந்திரம் தொடங்கி, பல மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்து போனதற்குக் காரணம், தலைமைக் குடும்பத்தின் தவறான அணுகுமுறைகளே. காங்கிரஸின் தொடர் தோல்விகள், பாஜகவுக்கு எதிரான அணிக்குத் தலைமை வகிக்கும் தகுதியை, அதனிடம் இருந்து பறித்துக் கொண்டே வருகின்றன. இனிமேலும் அந்தக் கட்சி, இந்திய அரசியலில் ஏற்புடையதாக இருக்க வேண்டுமானால், குடும்பப் பிடியில் இருந்து வெளியே வர வேண்டும்.
பாஜகவுக்கு மாற்றாக, காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாத சூழலில், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று இல்லாதது போல் இருக்கும் நிலை போன்று மத்தியிலும் உருவாகிவிடுமோ என்ற ஐயம் மெல்லத் தலை தூக்கி இருக்கும் காலக் கட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி, புதுடெல்லியைத் தாண்டி பஞ்சாப்பில் அடி எடுத்து வைத்து இருப்பது வரவேற்கத்தக்கதே. புதுடெல்லியில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியைத் தருவதாக, மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் பிம்பம், பஞ்சாபில் காங்கிரஸ் மீது வெறுப்படைந்த மக்களுக்கு மாற்று வழியைக் காண உதவியிருக்கிறது.
சிறுசிறு மாநிலங்களில் தன்னுடைய கிளையைப் பரப்பத் தொடங்கியிருக்கும் ஆம் ஆத்மியின் முயற்சி, இந்தியா முழுவதும் வேர் பிடிக்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸ், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், இதே வேகத்தில் பயணிக்குமானால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பிட ஓர் அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்பதை காந்திய மக்கள் இயக்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது. அந்த இடத்தை அடைந்திட ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு இருக்கிறது. காலதேவனின் போக்கினை, கவனித்துக் கொண்டே இருப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...