Published : 11 Mar 2022 12:22 PM
Last Updated : 11 Mar 2022 12:22 PM
சென்னை: கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை வைத்து, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கு கவலைக்குரியதாக உள்ளது. கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில், தென் மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சந்திப்புக் கூட்டம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் காணொவி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலில், தமிழகப் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பெற்று மாநிலத்துக்கே முன்னோடியாகத் திகழ்கின்ற பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து இந்தியப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த மாநாடு ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும் என முதலில் வாழ்த்துகிறேன்.
இந்த மாநாட்டின் மையப் பொருளாக,‘உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைந்த, சமமான மற்றும் தரமான கல்வியினை நடைமுறைப்படுத்துதலின் அவசியம்’ என்கிற - ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறைகூவல் அமைந்துள்ளது நாட்டின் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என நம்புகிறேன்.
இந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரமான உயர்கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது. அறிவுப்பூர்வமான, அறிவியல்சார்ந்த உண்மைகளை மட்டுமே பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆகவேதான், தென்னகத்தைச் சார்ந்த ஆறு மாநிலங்களின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் இருக்கக்கூடிய இந்த அவையில், தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை தெரிவிப்பதற்குப் பெருமையாக இருக்கிறது. இத்தகைய பெருமையினையும் புகழையும் பெற்றுத் தந்துள்ள தமிழக அரசின் உயர்கல்வித்துறை மற்றும் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.
2020-21-ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பில் அனைத்து இந்திய அளவில் தமிழகத்தின் 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 33 கல்லூரிகள் முதல் நூறு இடங்களுக்குள் உள்ளன. சென்னையிலுள்ள லயோலா கல்லூரி அனைத்து இந்திய அளவில் மூன்றாவது இடமும் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கின்றன.
பள்ளிக் கல்வி முடித்து, உயர்கல்விக்கு பயிலவரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 விழுக்காடு. ஆனால், தமிழகத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு என்ற அளவுக்கு மிக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தின் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவிலான சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது உயர்கல்வியில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனை. அதுமட்டுமல்ல, 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது.
தமிழகத்தில் 1,553 கல்லூரிகள் 52 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், 1,096 தொழிற்கல்வி நிறுவனங்கள் உயர்கல்வி அளித்து தமிழகம் கல்வி வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. தொழிற்கல்வியிலும், மருத்துவக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து, சாதாரண நிலையில் உள்ளவர்களும் சிறந்த நிலைக்கு உயர வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு.
அதோடு, தொழிற்கல்வி மற்றும் மருத்துவப் படிப்பில் சேர "நுழைவுத்தேர்வு" கட்டாயம் என்பதை ஒழித்துக்கட்டி, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் அளவில் மேற்படிப்பில் இடம் கிடைக்கச் செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துப் பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விடுதலை பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்பதே திராவிட இயக்க வழி வந்த நமது கொள்கை. அந்த விடுதலையை அடைவதற்கு கல்வியே திறவுகோல்.
ஆகவே, பெண் கல்வியிலும் தமிழக அரசு பெண்களுக்கென்று தனிக் கல்லூரிகள், இருபாலர் கல்லூரிக்கு அனுமதி, பெண்களுக்கென்று தனிப் பல்கலைக்கழகம், இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்பில் பெண்களுக்கு உதவித்தொகை, அகில இந்தியப் பணிகளுக்கு தேர்ச்சி பெற பயிற்சி தரும் மையங்கள், வேலைவாய்ப்பிற்கான கணினிப் பயிற்சி, முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கான உதவித்தொகை போன்ற மாணவியர்களுக்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல்வேறு திட்டங்களை, அறிவிப்புகளை 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டிருந்தோம். அதில், இத்தனை ஆண்டுகளும் இல்லாத வகையில், உயர்கல்வித் துறைக்கு 5,369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உயர்கல்வி சென்றடையாத பகுதிகளுக்கும் அடுத்த பத்தாண்டுகளில் அரசால் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதிகளவிலான நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரநிலையை அடைவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தாய்மொழிக் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு, தொடக்கத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளில் இளநிலை வகுப்புகள் தமிழில் நடப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தொழிற்கல்வியிலுள்ள பாடநூல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் பட்டதாரிகளை உருவாக்குவதும், முனைவர் பட்டங்களை வழங்குவதும், தேசிய மற்றும் உலகளவில் தரவரிசை பெறுவதுமாகவும் பணியாற்றி வருகின்றன. ஆனாலும் கூட, இந்திய உயர்கல்வியின் முக்கியமான குறிக்கோளான அனைவருக்கும் வேலை தரும் கல்வி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை உங்களுக்கு இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
திறன் சார்ந்த கல்வியும் பயிற்சியும் பாடத்திட்டங்களில் கட்டாயப்படுத்துதல் அவசியம். அதனால்தான், மார்ச் 1 அன்று, ‘நான் முதல்வன்’ திட்டத்தை மாணவச் செல்வங்களுக்காகத் துவங்கி வைத்தேன். பல்கலைக்கழகத்தின் தரத்தையும் செயல்பாட்டையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுவோர் துணைவேந்தர்கள்தான். நீங்கள் அனைவரும் அறிவியல்பூர்வமான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை வைத்து, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவலைக்குரியதாக உள்ளது. கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும்.
மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். இந்த மாபெரும் மாநாடு தன் நோக்கங்களில் வெற்றி பெறவும் அதன் மூலம் நமது நாட்டின் உயர்கல்வி மேன்மை பெற வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT