Published : 10 Mar 2022 03:42 PM
Last Updated : 10 Mar 2022 03:42 PM
சென்னை: "தமிழகத்தில் 2024-ல் தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொண்டு ஆட்சியில் அமர்வதற்கும், மக்களின் அன்பை பெறுவதற்கும் பாஜக தயாராக இருக்கிறது" என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
5 மாாநில தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மறுபடியும் ஒருமுறை நம்முடைய நாடு, ஒருமித்த குரலிலே உறுதியான வார்த்தையை இன்று பதிவு செய்திருக்கிறது. நாங்கள் பாரத பிரதமர் மோடியோடு என்றும் பயணிப்போம் என்று உறுதிபடுத்தியிருக்கிறது.
மணிப்பூர், கோவா, உத்தராகண்ட்டில் உரக்கமாக இன்று சொல்லியிருக்கின்றனர். எல்லாவற்றையும் தாண்டி, உத்தரப் பிரதேசத்தில் 33 ஆண்டுகளுக்குப் பின், ஆளுகின்ற கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ளது. இதை சரித்திரம் என்று கூறவில்லை என்றால், எதை நாம் சரித்திரம் எனக் கூறுவோம். கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். அரசியல் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக ’மாற்றம் வரப்போகிறது, பாஜக திரும்ப வராது’ என்று கூறிவந்தனர்.
மணிப்பூரில் 2012-ல் பாஜக சட்டப்பேரவையில் ஒரு சீட் கூட இல்லை. அரை சதவீத வாக்கு கூட இல்லாத நிலையில் இருந்த பாஜக தனது கடுமையான உழைப்பால், 2017-ல், 21 இடங்களைப் பிடித்து பாஜக ஆட்சிக்கு வந்தது. 2022-ல் தனிப்பெரும்பாண்மையுடன் அங்கு ஆட்சியில் அமரப்போகிறது. மணிப்பூரில் பாஜகவுக்கு எதிராக மதச்சாயம் பூசுவார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். அங்கு 43 சதவீதம் கிறிஸ்தவர்கள், 9 சதவீதம் இஸ்லாமியர்கள், அதாவது சிறுபான்மையினர் 52 சதவீதம் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தில், பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருப்பது சரித்திரம்.
கோவாவில் 2017-ல் 13 எம்எல்ஏக்கள் மட்டும் இருந்தனர், கூட்டணி கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. இந்தமுறை 20 இடங்களுக்கு மேல் பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உத்தராகண்டில் 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக மீண்டும் வெற்றி பெறுமா என கேள்வி எழுப்பினர். காங்கிரஸ் அங்கு நேற்றில் இருந்தே வெற்றி கொண்டாட்டத்தை ஆரம்பித்திருந்தனர். ஆனால், அங்கு 60 சதவீத அளவில் பாஜகவுக்கு மக்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்பளித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சீரிய ஆட்சியில், அங்கு பாஜக போட்டியிட்ட இடங்களில் 68 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. 273 இடங்களுக்கு மேல் பிடித்து பாஜக ஆட்சியில் அமர்கிறது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியிலிருந்த கட்சிக்கு மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு மிகப் பெரிய அதிசயம். இந்த 4 மாநில வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பிரதமர் மோடி.
இத்தனை ஆண்டுகாலமாக இந்தியாவில் இருந்தது ஓட்டு வங்கி, வாக்கு வங்கி. ஜாதி அடிப்படையில், மத அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி எதற்காக தொடங்கப்பட்டதோ அதன் அடிப்படையில் அதனை 2014-ல் தொடங்கி 2022 வரை உடைத்துக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. எந்தவொரு கட்சிக்கும்கூட வாக்கு வங்கி கிடையாது. சாதரண மக்களை ஓர் அரசு தொடர்ந்து தனது திட்டத்தின் மூலமாக அவர்களது வாழ்க்கையை உயர்த்தும்போது, அந்த மக்கள் நிரந்தர வாக்காளர்களாக மாறுவார்கள் என்பதற்கு உத்தரப் பிரதேசம் ஒரு சாட்சி.
கரோனா காலக்கட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். எனவே அந்த மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள் என கூறியிருந்தனர். அதையெல்லாம் கடந்து மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். கரோனா பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி கையாண்ட விதத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி. கிட்டத்தட்ட 87 சதவீதம் இளைய சமூகத்தினர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளோம். பாஜகவின் உழைப்பிற்கான ஊதியத்தை மக்கள் அடுத்தடுத்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களும் பாஜக வளர்ச்சித் திட்டங்களுக்காக வாக்களித்து உள்ளனர். இது தமிழகத்திலும் நிகழும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. எப்படி 2012-ல் ஆரம்பித்து 2017-ல் வெற்றி பெற்றோமோ, அதேபோல தமிழகத்தில் பாஜக 2024-ல் ஆட்சிக்கு வருகிறதா அல்லது 2026-ல் ஆட்சிக்கு வருகிறதா என நமக்கு தெரியாது. காரணம் இன்று காலை தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழக பாஜகவும் அதற்கு தயாராக இருக்கிறது.
தமிழக பாஜக 2024-ல் தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொண்டு ஆட்சியில் அமர்வதற்கும், மக்களின் அன்பை பெறுவதற்கும் தயாராக இருக்கிறது. அதற்கு வருகின்ற காலம் பதில்சொல்லும். அதேநேரம் தலைமை தேர்தல் ஆணையர் கூறியதைப் போல, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, அதெல்லாம் முடிந்து வரும்போது தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக இன்று கூறியுள்ளது. அதனால் நிச்சயமாக, தமிழகத்திலும் கூட மிகப்பெரிய மாற்றம் காத்துக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT