Published : 10 Mar 2022 01:22 PM
Last Updated : 10 Mar 2022 01:22 PM
சென்னை: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (10-3-2022) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் பகுதிகளில், சமீபத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்து மத்திய வெளியுறத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்துள்ள முதல்வர், தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த மூன்று மீனவர்களுடன் இந்தோனேசிய கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இந்தோனேசிய வான் மற்றும் கடல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள்மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இந்தோனேசியாவின் ஆஷேயில் உள்ள டிட்போலைர்ட் பியருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அம்மீனவர்கள், அந்தமான் பதிவு எண் கொண்ட மீன்பிடிக் கப்பலில் (IND-AN-SA-MM-2110) மீன்பிடிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 22-2-2022 அன்று கொச்சி துறைமுகத்தில் இருந்து 33 மீனவர்கள், 3 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மூலம் (IND-TN-15-MM-5501, IND-TN-15-MM-7998 மற்றும் IND-TN-15-MM-5468) மீன்பிடிக்கச் சென்றதாக மீனவர் சங்கத்தினர் மூலம் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், 7-3-2022 அன்று அவர்கள் செஷல்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, செஷல்ஸ் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, இந்தோனேசிய மற்றும் செஷல்ஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சினையை எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT